பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் திருமண மண்டபங்களில் மது விநியோகம் பொன்ற மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும். வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. திருமண நிகழ்வுகளில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்கின்றனர் இந்த இடங்களில் மது வினியோகிக்கப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்கையில், திருமண மண்டபங்களில் மது விற்பனை செய்யப்படாது என உறுதியாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.