எடப்பாடி உள்பட யாரையும் விடமாட்டோம்... எல்லோரையும் கூண்டில் ஏற்றுவோம்... மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு!

By Asianet TamilFirst Published Jan 25, 2020, 10:06 PM IST
Highlights

இந்த ஆட்சிக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் மக்கள் பற்றி எந்த பற்றும் பரிவும் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் பற்று எல்லாமே பணத்தின் மீதுதான். பணத்துக்காக மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதாக பேசுவது வெட்கக்கேடு. டெண்டர் விடுவதில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவர் முதல்வராக இருப்பதால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்காது என சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. 
 
நெடுஞ்சாலை துறையில் நடந்த ஊழல் வழக்கை திமுக ஆட்சிக்கு வந்ததும் விடமாட்டோம். முதல்வர் உட்பட ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுவோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுகூட்டம்  நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறையில் திமுகவுக்கு பெரும் வெற்றியைப் பெற்றார். அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். இந்த இரு தேர்தல் வெற்றியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வெற்றியாகும். அந்த வெற்றியைப் பெற்றேத் தீர்வோம் என மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளில் உறுதியேற்போம்.

அன்று மொழிப்போர் தியாகிகள் போராடிய போராட்டம் இன்றுவரைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி வந்ததிலிருந்து இந்தியைத் திணிக்கும் முயற்சியைத் தொடந்து செய்துக்கொண்டிருக்கின்றனர். நாம் எதிர்ப்பு தெரிவித்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள். இந்தி திணிப்பை எதிர்த்து திமுக குரல் கொடுத்தது. ஆனால், அதிமுக வாயைத் திறக்கவில்லை. இங்கே உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு பாதம் தாங்கிக்கொண்டிருக்கிறார்.
அதேபோல் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் என்ற ஒரு ஜோக்கர் . அவர் தேமுதிகவில் இருந்தபோது சட்டப்பேரவையில் பேசும்போது தகவலோடு பேசுகிறார் என நினைத்திருக்கிறேன். ஆனால், அதிமுகவில் இணைந்து அமைச்சர் ஆனபிறகு எதையாவது பேசி திரிகிறார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இல்லாமல் இந்தி, சமஸ்கிருத வளர்ச்சி துறை அமைச்சராக செயல்படுகிறார்.
இந்த ஆட்சிக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் மக்கள் பற்றி எந்த பற்றும் பரிவும் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் பற்று எல்லாமே பணத்தின் மீதுதான். பணத்துக்காக மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதாக பேசுவது வெட்கக்கேடு. டெண்டர் விடுவதில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவர் முதல்வராக இருப்பதால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்காது என சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. 
சிபிஐ விசாரணையைச் சந்திப்பதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று சிபிஐ விசாரிக்கக் கூடாது தடை உத்தரவை பெற்றார். மாநிலத்தில் பல பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் மூலம் 3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த வழக்கை முதல்வர் சந்திக்கவில்லை. ஒருவேளை முறையாக சிபிஐ விசாரித்தால் எடப்பாடி முதல்வராக இருக்கமாட்டார், சிறையில் இருந்திருப்பார். இதை இப்போது விட்டாலும் திமுக ஆட்சி வந்ததும்விடமாட்டோம். முதல்வர் உட்பட ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுவோம்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!