கை விரித்த மோடி! கலங்கிய எடப்பாடி! டெல்லியில் நடந்தது என்ன?

By sathish kFirst Published Nov 23, 2018, 9:46 AM IST
Highlights

புயல் நிவாரண நிதி கேட்க டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலங்கி நின்ற நிலையில் தற்போதைதக்கு உதவ எதுவும் இல்லை என்று மோடி கை விரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லாத நிலையில் மத்திய அரசின் கதவை தட்டுவது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார். இதனை அடுத்து உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான நேரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கோரப்பட்டது. நேரம் கேட்டு இரண்டு நாட்களுக்கு பிறகே எடப்பாடிக்கு மோடி அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து மோடி சந்திக்க இருக்கும் நாளுக்கு முன்னதாகவே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு முதற்கட்டமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் மறுநாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை மட்டும் அழைத்துக் கொண்டு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் பிரதமர் வீடு உள்ள நம்பர் 7 ரேஸ்கோர்ஸ் சாலைக்கு விரைந்தார்.

காலை ஒன்பது நாற்பத்தைந்து மணிக்கு மோடியுன் சந்திப்பிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் பத்து நிமிடங்கள் முன்னதாகவே எடப்பாடி மோடியின் இல்லத்திற்கு சென்று இருந்தார். சரியாக 9.45 மணிக்கு மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்கு பின்னர் நேரடியாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிப்பின் தீவிரம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் புயலின் கோரத்தாண்டவத்திற்கு லட்சக்கணக்கான தென்னைமரங்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் பறிபோனதை புகைப்படமாகவும், வீடியோ காட்சிகளாகவும் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக கொடுத்துள்ளார். மேலும் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக 1500 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

ஆனால் தற்போதைக்கு புயலின் பாதிப்பை மத்திய அரசின் தரப்பில் இருந்து பார்வையிடாமல் நிதி அறிவிக்க முடியாது என்று எடப்பாடியிடம் மோடி கைவிரித்துள்ளார். உடனடியாக புயல் பாதிப்பை தாங்களே நேரில் வந்து பார்வையிடுமாறு முதலமைச்சர்  எடப்பாடி பிரதமர் மோடியிடம் கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால் ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநில தேர்தல்களை அப்போது எடப்பாடியிடம் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனடியாக மத்திய குழுவையாவது அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுவதாக மோடி கூறிய பிறகே நம்பிக்கையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுள்ளார். ஆனாலும் கூட டெல்லி வரை வந்து வெறுங் கையோடு திரும்பும் வருத்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகத்தில் தெரிந்தது. செய்தியாளர் சந்திப்பின் போதும் கூட எடப்பாடி சோர்வாகவே காணப்பட்டார்.

click me!