
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- ஆட்சியில் பெண்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதல்வர் தவறிவிட்டார். தமிழகத்தல் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டிக்கிறோம். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம், கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததே மழைநீர் தேங்கியதற்கு காரணம். 2015ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது அதிமுக அரசு ரூ.5000 நிவாரணம் வழங்கியது. திமுக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் தேங்கிய மழைநீரை கூட திமுக அரசு அகற்றவில்லை.
தமிழகம் முழுவதும் 1900 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், இதனை மூடியுள்ளனர். இது ஏழை மக்களுக்கு எதிரான அரசு என்பதையே காட்டுகிறது. 2021 பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் ரூ.2500 வழங்கப்பட்டது. திமுக அரசு பொங்கல் பரிசை வழங்காதது மக்களுக்கு ஏமாற்றம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
விசாரணை என்ற பெயரில் அதிமுக நிர்வாகிகளை அழைத்து செல்லும் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில்லை. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது. அரசு அலுவலகங்களுக்கே சென்று அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.