சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வோம்... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு..!

By Asianet TamilFirst Published Nov 20, 2020, 10:12 PM IST
Highlights

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளவதற்கான முன்னேற்பாடுகளில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சி முதன்முறையாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
 எனவே, அதிமுக அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்தி வருகிறது. அதிமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், பிரசாரக் குழு, மீடியா குழு என பல குழுக்கள் பிரிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டு விடும் கட்சி அல்ல அதிமுக. தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வில் திமுகவும் காங்கிரஸும் செய்த துரோகத்தை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இதேபோல அதிமுக அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
 

click me!