
சசிகலாவையும், பன்னீரையும் சாய்த்து எடப்பாடி தனிக்கொடி நாட்டுவார் என்று, அவர் முதல்வர் ஆன நாளிலிருந்தே தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அது தற்போது கிட்டத்தட்ட உண்மையாகி கொண்டிருக்கிறது.
மத்திய அரசை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேண்டும். பாஜகவின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் அரசு தமிழகத்தில் வேண்டும் அவ்வளவுதான்.
அதற்கேற்ற வகையில், எடப்பாடி செயல்படுவார் என்று, தம்பிதுரை மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.
அதற்கு முன்னதாக, அணிகள் இணைப்பு என்ற போர்வையில் பன்னீர் வாயாலேயே, சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்லவைத்து, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மூலமாக அதுவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டது.
இப்போது, பன்னீர் அணி தாராளமாக, எடப்பாடி அணியுடன் இணையலாம். ஆனால், முதல்வர் பதவி வேண்டும் என்று வெளிப்படையாக எந்த கோரிக்கையும் முன்வைக்க முடியாது.
அதையும் மீறி அவர் ஏதாவது பேசினால், பன்னீருக்கு பதவி ஆசை என்று மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இதுதான், கொங்கு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் தம்பிதுரை மூலம், வெற்றிகரமாக எடப்பாடி செய்து முடித்துள்ள ஆபரேஷன்.
மேலும், பன்னீர்செல்வம் அணியில் உள்ள பல எம்.எல்.ஏ க்களையும் வளைத்து வைத்துள்ளது எடப்பாடி அணி. அதனால், பன்னீர்செல்வம் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.
அத்துடன், பன்னீர் அணியில் உள்ள எம்.எல்.ஏ க்கள் சிலரையும் சேர்த்து, தற்போது 130 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே, சசிகலாவுக்கு, பன்னீருக்கு இங்கு வேலையே இல்லை. அதிமுக ஆட்சி என்பது இனி கொங்கு அமைச்சரவையின் ஆட்சியாக இருக்கும்.
இந்த பொன்னான வாய்ப்பை விட்டால், இன்னொரு வாய்ப்பு இனி அமைவது சந்தேகமே. எனவே இதை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதே கொங்கு மண்டலத்தின் லட்சியமாக உள்ளது.