
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையிலான இரு அதிமுக அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, குறிப்பாக சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டமன்று ஆட்சிக்குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்ட பின்பு, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக பிரிந்து சென்றார். இதனையடுத்து அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டது, ஆனால் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசணை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் செங்கோட்டையன், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, ஜெயக்குமார் இடம் பெற்றுள்ளனர்.