
என்னதான் இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சில செயல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. திருவாரூர் மாவட்டத்துக்காரரான கருணாநிதி சென்னையில் செட்டிலான பிறகு தன் ஊர்பக்கம் தலைகாட்டுவதேயில்லை. ஜெயலலிதா கொடநாடுக்கு வரும் போது பெரிதாய் பொதுமக்களை சந்தித்ததில்லை. ஆனால் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியோ அடிக்கடி சொந்த ஊரான சேலம் வருவதும், அங்கேவைத்து கட்சி ஆலோசனைகள், மக்கள் நல திட்ட ஆய்வுகளில் இறங்குவதும் ஆச்சரியப்படுத்துகின்றன.
தலைநகர் சென்னையை விட்டு தன் சொந்த ஊருக்கு வந்து ஒரு முதல்வர் பரிபாலனம் செய்வதென்பது தமிழக அரசியலுக்கு புதுசுதான் என்பதால்தான் எடப்பாடியை அரசியல் பார்வையாளர்களும், விமர்சகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு கிளம்பினார் முதல்வர். கோவை விமான நிலையம் வந்திறங்கியவர், அங்கே விமான நிலையத்திலேயே ‘உறியடி’ நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கல் கொண்டாட்டங்களை துவக்கினார்.
பின் காரில் சேலம் சென்றவர் சொந்த ஊரில் ரிலாக்ஸ்டாக பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார். பின் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கிராம செயலர்கள் கூட்டத்தை ஓமலூரில் நடத்தி, உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். என்னதான் பொங்கல் விழாவுக்கு வந்திருந்தாலும் கூட எடப்பாடியாருக்கு தினகரனின் நினைவுகள் எரிச்சலையும், ஆதங்கத்தையும் கொடுக்கின்றன என்பது நேற்று அவர் பேசிய பேச்சிலிருந்தே வெளிப்பட்டது.
அதாவது “தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு ரெண்டு நிமிடம் ஒதுக்கினால் அவருக்கு நாற்பது நிமிடங்களை ஒதுக்குகின்றன ஊடகங்களும், பத்திரிக்கைகளும். எங்கள் அரசை கவிழக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன, கட்சியை பிளக்கவும் சதிசெய்கின்றனர். ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்குவோம்.
உள்ளாட்சி தேர்தலுக்கு எங்கள் கழகம் தயாராகவே உள்ளது.” என்றார்.
ஆக பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனாலும் கூட நிம்மதியில்லாமல் எடப்பாடியாரின் நினைவுகள் முப்பொழுதும் தினகரனின் மூவ்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. விழிப்பாய் இருக்கையிலேயே அடித்து ஆடும் தினகரன், சற்று பிசகினாலும் பின்னி எடுத்துவிடுவாரோ? என்கிற பயமே இப்படி ஆட்டிவைக்கிறது.
ஹூம், முதல்வராய் இருந்து என்ன புண்ணியம்? நிம்மதி இல்லையே மனுஷனுக்கு.