தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்... எகிறியடடித்த அறிவிப்புகள்... எல்லாம் தெரிந்தேதான் செய்தாரா எடப்பாடி..?

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2021, 12:59 PM IST
Highlights

 பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இதனை சாதித்த முதல்வர் எடப்பாடிக்கு எங்கள் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது

தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டதோ அந்த சமயத்திலிருந்து அரசியல் சரவெடிகளை அட்டகாசமாக வெடித்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பாக சட்டசபையில் அவர் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள், அதிமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பை மேலும் பிராகசமடையச் செய்துள்ளன.
 
வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாமக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர்களை உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட சாதியினரை சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என உருவாக்கி அதற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆயினும் வன்னியர்களுக்கென தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து கோரி வந்தது.
 
இந்தநிலையில்தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.  வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடியின் இந்த நடவடிக்கையை வன்னிய சமூகத்தினர் மனமார வரவேற்றுள்ளனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, ‘’கால் நுற்றாண்டு கால எங்களது போராட்டத்திற்கு இப்போதுதான் உண்மையான வெற்றி கிடைத்துள்ளது. பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இதனை சாதித்த முதல்வர் எடப்பாடிக்கு எங்கள் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது’’என்கிறார்கள்.
 
 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து அசத்திவரும் எடப்பாடி அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது, ஏழை எளிய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது.
 
அது மட்டுமல்ல. கூட்டுறவு வங்கிகளிலும், சங்கங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி வெளியிட்டார். அவரது இந்த கடைசி நேர அதிரடிகள் தமிழக தேர்தல் களத்தின் போக்கையே மாற்றிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

click me!