எடப்பாடியாரை சீண்டிய செல்லூர் ராஜு... முதலமைச்சர் வேட்பாளர் குஸ்தி.. அதிமுகவில் ஆரம்பமானது ரகளை..!

By Selva KathirFirst Published Aug 11, 2020, 10:23 AM IST
Highlights

மனதில் உள்ளதை அப்படியே வெளியே பேசுபவர் என்கிற பெயர் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு உண்டு. அதிமுக அமைச்சர்களில் இவர் ஒரு வித்தியாசமானவர். சில சமயங்களில் இவரது பேட்டி வெள்ளந்தித்தனமாக இருக்கும். ஆனால் அவர் கூறுவது தான் உண்மையாகவும் இருக்கும். பொதுவாக அதிமுக தொடர்புடைய எந்த கருத்தாக இருந்தாலும் மிகவும் கவனமாகவும் அதே சமயம் யாரையும் புண்படுத்தாத வகையில் பேசக்கூடியவர் செல்லூர் ராஜூ.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற குஸ்திக்கு அடித்தளமிட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி.

மனதில் உள்ளதை அப்படியே வெளியே பேசுபவர் என்கிற பெயர் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு உண்டு. அதிமுக அமைச்சர்களில் இவர் ஒரு வித்தியாசமானவர். சில சமயங்களில் இவரது பேட்டி வெள்ளந்தித்தனமாக இருக்கும். ஆனால் அவர் கூறுவது தான் உண்மையாகவும் இருக்கும். பொதுவாக அதிமுக தொடர்புடைய எந்த கருத்தாக இருந்தாலும் மிகவும் கவனமாகவும் அதே சமயம் யாரையும் புண்படுத்தாத வகையில் பேசக்கூடியவர் செல்லூர் ராஜூ. அதிமுக இரண்டாக பிரிந்திருந்த போது ஓபிஎஸ் தரப்பை விமர்சிக்கும் போது கூட மிகவும் கவனமாக செயல்பட்டவர்.

மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவுடன் இணைந்த போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் அதே மதிப்பையும், முக்கியத்துவத்தையும் ஓபிஎஸ்க்கும் கொடுத்தவர் செல்லூர் ராஜூ. கட்சி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரையும் சமமாக குறிப்பிட்டு பேசக்கூடியவர் அமைச்சர் செல்லூர் ராஜு. மேலும் ரஜினி, கமலை விமர்சிக்கும் போது கூட நாகரீகமாக விமர்சித்து பேசியதால் செய்தியாளர்களின் செல்லப் பிள்ளையாக செல்லூர் ராஜூ வலம் வருகிறார்.

இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த பேட்டி அதிமுக தலைமையை அதிர வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் ஓபிஎஸ் தேனி மற்றும் தென் மாவட்டங்கள் என தனது பிரச்சார பயணத்தை சுருக்கிக் கொண்டார். ஆனால் முதலமைச்சர் இபிஎஸ்சோ தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்றார். அதிமுக வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் என்று எல்லாம் பிரித்துப் பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அதிமுகவை தலைமை ஏற்று வழிநடத்தியது இபிஎஸ் தான் என்கிற தோற்றம் உருவானது. இதே போல் சட்டமன்ற தேர்தலுக்கும் இபிஎஸ் தரப்பு தனியாக தயாராகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். எடப்பாடியின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் என்பவர் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, களத்தில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவது என சுனில் டீம் பம்பரமாக சுழன்று வருகிறது.

மீண்டும் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும், தற்போதுள்ள அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனக்கு என்று தனியாக தேர்தல் வியூக வகுப்பாளரை ஏற்பாடு செய்துள்ளார். இதன் முலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது தான் எடப்பாடியாரின் திட்டமாக உள்ளது. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி எடப்பாடியாரை சீண்டும் வகையில் இருந்தது. அதாவது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லாம் யாரும் கிடையாது என்கிற ரீதியில் அவர் பேசியுள்ளார்.

மேலும் தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி தான் முதலமைச்சரை தேர்வு செய்வோம் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த தாங்கள் விரும்பவில்லை என்பது தான் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டியின் சாராம்சமாக உள்ளது. அமைச்சராக இருந்து கொண்டு தற்போது முதலமைச்சராக இருக்கும் ஒருவரை நேரடியாக சீண்டும் வகையில் செல்லூர் ராஜூ பேசியிருப்பது தான் தற்போது ஹாட் டாபிக். இதனை வெள்ளந்தி தனமாக அமைச்சர் பேசிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினாலும், எடப்பாடியாரை முதலமைச்சர் வேட்பாளராக அவரது மனம் ஏற்கவில்லை எனவே தான் அவர் தன்னை அறியாமல் இப்படி பேசிவிட்டார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார், எப்படி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்பது எல்லாம் கட்சி மேலிடத்தின்வேலை. இதில் அமைச்சர்கள் தனித்தனியாக கருத்து கூற ஆரம்பித்தால் எப்படி என்று ஒரு தரப்பு பொங்கி வருகிறது. இதனால் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை மையமாக வைத்து ரகளை ஆரம்பமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

click me!