விரைவில் சிறைக்கு செல்வார் எடப்பாடி பழனிச்சாமி... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சாபம்..!

By Asianet TamilFirst Published Jun 14, 2021, 10:16 PM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்” என்று கூறி அதிமுகவை அதிரடித்தார். மேலும் அந்தப் பேட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தையும் அன்புமணி விமர்சனம் செய்திருந்தார். அன்புமணியின் இந்தப் பேட்டிக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பதிலடி கொடுத்திருந்தார்.
“பாமக இல்லையெனில், அதிமுக வெற்றிபெற்றிருக்காது என்று சொல்வது சரியில்லை. ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால்தான், அதிமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யானார். ஓபிஎஸ் குறித்து பேசினாலோ, அதிமுகவை பாமக குறை கூறினாலோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று புகழேந்தி காட்டமாகப் பதிலடி கொடுத்திருந்தார். 
இந்நிலையில், அதிமுகவின் செய்திதொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் - ஈபிஎஸ் உத்தரவிட்டனர். “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக” ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். 
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து புகழேந்தி காட்டமாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். “கட்சியிலிருந்து நீக்கியதால் எந்த வருத்தமும் இல்லை. ஆனால், கட்சியில் சர்வாதிகாரியைப் போல எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஒரு நல்ல அரசியல் எதிரியை இனிதான் அவர் சந்திக்கப் போகிறார். எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக இனி நான் வெளியிலிருந்து பேசப்போகிறேன்” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

click me!