கடைசி நேரத்தில் ரத்தான எடப்பாடி பழனிச்சாமி-டாக்டர் ராமதாஸ் சந்திப்பு... அதிமுக-பாமக கூட்டணியில் சிக்கல்..?

By Asianet TamilFirst Published Feb 6, 2021, 9:47 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சந்திப்பார்கள் என்று தகவல் வெளியான நிலையில், அந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்தானது.
 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அமைச்சர்கள் குழு மூன்று முறை ராமதாஸை சந்தித்தபோதும், கூட்டணி குறித்து ராமதாஸ் பேசவில்லை.
இதனால், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அமைச்சர்கள் குழுவும் பாமக நிர்வாகிகள் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் இக்கூட்டத்தில் எடுக்கப்படாமல் முடிந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கீரீன்வேயிஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.


இந்தத் தகவல் மூலம் பாமக - அதிமுக இடையே சுமூகமான முடிவு எட்டப்பட்டுவிட்டது என்றும் அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி - ராமதாஸ் சந்திப்பு நிகழ உள்ளதாகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்தானதால், அதிமுக - பாமக கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி - ராமதாஸ் சந்திப்பு ரத்தான நிலையில், அமைச்சர் தங்கமணி குழுவுடன் பாமக நிர்வாகிகள் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!