விராலிமலையில் ஆதரவாளர்களுடன் சந்திப்பு! எடப்பாடியை பதற வைத்த விஜயபாஸ்கர்!

By vinoth kumarFirst Published Sep 13, 2018, 10:43 AM IST
Highlights

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் டிமிக்கி கொடுத்து வரும் விஜயபாஸ்கர் விராலிமலையில் தனது ஆதரவு நிர்வாகிகளை அழைத்து போட்ட ஒரே ஒரு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதற வைத்துள்ளது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் டிமிக்கி கொடுத்து வரும் விஜயபாஸ்கர் விராலிமலையில் தனது ஆதரவு நிர்வாகிகளை அழைத்து போட்ட ஒரே ஒரு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதற வைத்துள்ளது. சென்னையில் நேற்று காலை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு நேராக சென்னை நந்தனத்தில் வரும் 19ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சிக்கான பந்தக்கால் நடும் விழாவில் முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. 

 திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் நேராக நந்தனம் புறப்பட்டனர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாய் மட்டும் நேராக சென்னை கோட்டைக்கு சென்றது. நந்தனத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தலைமையில் கால்  கோள் விழா நடைபெற்று முடிந்தது. சென்னையில் நடைபெற்ற கட்சியின் முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கொண்டே முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்விகள் எழுந்தன.  இந்த நிலையில் திடீரென பிற்பகல் 2 மணிஅளவில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து மீண்டும் அவர் மூத்த அமைச்சர்களை அழைத்தது ஏன் என்று பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தான் குட்கா ஊழல் புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென ரகசிய கூட்டம் நடத்திய தகவல் எடப்பாடி காதுக்கு எட்டியது. மேலும் கூட்டத்தில் விஜயபாஸ்கர் பேசிய தகவல்களும் உளவுத்துறை மூலமாக எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்தே நந்தனம் செல்லாமல் நேராக தலைமைச் செயலகம் வந்து விஜயபாஸ்கர் பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி.  செய்தியாளர் சந்திப்பின் போது விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடியும், ஜெயக்குமாரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் விஜயபாஸ்கரை பதவி விலகுமாறு எடப்பாடி கூறிவிட்டதாகவும், அதனை ஏற்காமல் தொடர்ந்து விஜயபாஸ்கர்  டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டால் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் முயற்சிப்பதாகவும், அதனை முறியடிக்க முதலமைச்சரும் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

click me!