அதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுப்பாகியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுப்பாகியுள்ளார். ஆகையால் இனி தேமுதிகவுடன் பேச அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொடுப்பதை வாங்கிக் கொள்வதா அல்லது டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து விஜயகாந்த் நிர்வாகிகளுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிகபட்சமாக பா.ம.க.விற்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 சீட் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவிடம் தற்போது 25 சீட் உள்ளது. அதில் தேமுதிகவுக்கு 4 சீட் தருவதற்கு அதிமுக தலைவர்கள் முன் வந்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவதற்கு பாமகவுக்கு இணையாக 7 சீட், ஒரு ராஜ்யசபா சீட், 7 சட்டப்பேரவை தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்தது.
ஆனால் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிக உடன்பட்டு வரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் அதிமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால், கூட்டணிக்கு வந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துகொண்ட தொகுதிகளை அறிவிக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழிபிதிங்கி நிற்கின்றனர்.
ஆனாலும், விடா கொண்டன் போல் தேமுதிக 7 சீட் கொடுக்க வேண்டும், இதேபோல், இடைத்தேர்தலிலும் 5 சீட் வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுகவுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதிலும் இழுபறி நீடித்துவந்தது. கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் மேடையில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டது.
இதனால், தேமுதிகவுடனான தன்னுடைய கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக முடித்துக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென திமுக பொருளாளர் துரைமுருகனுடன், தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், பெரும் அதிர்ச்சியை சந்தித்த தேமுதிக துணைசெயலாளர் சுதீஸ் மீண்டும் நேற்று இரவு நட்சத்திர விடுதி ஒன்றில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரவு 8 மணி முதல் 11 மணி வரையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், கடுப்பாகி போன பியூஸ் கோயல் நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வரும் தேமுதிகவுக்கு மக்களவையில் குறைந்த சீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 4 சீட் வரை கிடைத்தால் போதும் என பேசிவந்த தேமுதிகவிற்கு 2 அல்லது 3 சீட் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக மேலிடம் முடிவு செய்து அதை தேமுதிக தலைமைக்கும் தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் தேமுதிக பேசி நம்பகத்தன்மையை இழந்து விட்டது.
இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனி தேமுதிகவுடன் பேச வேண்டாம். அதோடு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய, அமைச்சர் தங்கமணி, வேலுமணியிடமும் பேட வேண்டாம் என முதல்வர் தடை விதித்துள்ளார். ஆகையால் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள தேமுதிக நாளை மீண்டும் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் டிடிவி தினகரனுடன் சேர்ந்த போட்டியிடலாமா என்று விஜயகாந்த் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.