தினகரனை கட்டுப்படுத்தும் முக்கிய அறிவிப்புகள்!! - எடப்பாடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை!!

First Published Aug 1, 2017, 10:21 AM IST
Highlights
edappadi meeting about control dinakaran


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரனை கட்டுப்படுத்தும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, ஓபிஎஸ் என அ.தி.முக..வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து டி.டி.வி.தினகரன் சசிகலா அணியை வழி நடத்தி வந்தார். ஆனால் அவரும் டெல்லி சிறைக்கு சென்றதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அணிக்கு தலைமையேற்று நடத்தி வருகிறார். 

அதே நேரத்தில் சசிகலா குடும்பத்தினரை கட்சி நடவடிக்கைளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரிந்த 2 அணிகளும் இணைவதற்கான முயற்சியை சிலர் முன்னெடுத்தனர். ஆனால் இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்த சூழ்நிலையில்டி.டி.வி.தினகரன் வரும் 5 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதற்காக அவர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள எடப்பாடி அணியினர் தினகரனுக்கு செக் வைக்கும் விதமான சில அதிரடி நடவடிக்கைகளை  எடுக்கப் போவதாக தெரிகிறது.

பரபரப்பான  இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மாவட்ட செயலாளர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். 

இந்த கூட்டத்தில்  இரு அணிகளும் இணைவது குறித்து பேசப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த 2 அணிகள் இணைவதன் மூலம் டி.டி.வி.தினகரனை கட்டுப்படுத்தலாம் எனவும் பேசப்படுகிறது.

அதே நேரத்தில்  ஆகஸ்ட் 5-ம் தேதி தினகரன் கட்சி அலுவலகம் வந்தால் அதைத் தடுத்து நிறுத்தவும், தினகரனை கைது செய்யவும் எடப்பாடி அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவில் பல முக்கிய பரபரப்பான திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

click me!