
அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் எனவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவிற்குள் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த உச்சகட்ட குழப்பம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் அளித்த புகாரில் டிடிவி தினகரன் மீது வழக்கு பாய்ந்ததன் பின் பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பணிகள் வெகுஜோராக நடைபெற்று வருகின்றன.
இதற்கு டிடிவி.தினகரன் கடுமையாக எதிர்க்க அவரை கழட்டிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் முழுமையாக கைப்பற்ற எடப்பாடி - பன்னீர்செல்வம் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உடன்பாட்டின் படி முதல் அமைச்சராக எடப்பாடியே தொடர்வது, அதிமுகவின் பொதுச் செயாலாளர் மற்றும் நிதி அமைச்சர் பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்குவது. இதற்கு இரு தரப்பும் பச்சைக் கொடி காட்ட தினகரனை வெளியேற்றும் படலம் வேகமெடுத்து வருகிறது..
இதனால் ஆவேசமடைந்த டிடிவி.தினகரன் தன்னிடம் இன்றளவும் விசுவாசமாக இருக்கும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன்,அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டெல்லிக்கான தமிழகப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரை வைத்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் மற்றும் பன்னீர்செல்வத்திற்கு எதிராக வெற்றிவேல் பேட்டியளித்ததும் இந்தவகையில் தான் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.
டிடிவி தினகரன் கழற்றிவிடப்பட்டு இரு அணிகளும் இணையும் பட்சத்தில் தனக்கு கீழ் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வைத்து அரசை கலைக்கவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
ஒருவேளை ஆட்சி கலைப்புக்கு தினகரன் தயாரானால்,தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வைத்து தினகரனின் பிரம்மாஸ்திரத்தை தவிடுபொடியாக்க ஓ.பி.எஸ்.தரப்பும் தயாராக இருக்கிறது.