
அதிமுகவிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூண்டோடு நீக்கப்படுவதாக அவை தலைவர் மதுசூதன அறிவித்துள்ளார்.
அதிமுக அணியில் கடந்த 10 நாட்களாக சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சிகள் நடந்து வருகிறது.
சசிகலா அணி ஓபிஎஸ் அணி என 2 பிரிவாக பிரிந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி வருகின்றனர்.
அதிமுக பொது செயலாளர் சசிகலா தேர்வு செல்லாது என மதுசூதனன் அறிவிக்க மதுசூதனன் முதல் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் நீக்குவதாக சசிகலா அறிவிக்க தினந்தோறும் பரபரப்பு காட்சிகள் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஆட்சியமைக்க அழைக்கப்பட அதற்கு ஒருநாள் முன்பு சசிகலா, டிடிவி தினகரன், டாகடர் வெங்கடேஷ் உள்ளிட்டோரை கட்சியில் இணைத்து தினகரனுக்கு துணை பொது செயலாளர் பதவியை அளித்தார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு மாறாக கட்சியில் இணைக்கப்பட்ட தினகரன் வெங்கடேஷை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்தார்.
பின்னர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக மறைந்த முதல்வரின் எண்ணங்களுக்கு மாறாக நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட அனைவரையும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்குவதாக தற்போது அவைத்தலைவர் மதுசூதனன் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் அதிமுக அணிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கட்சி கொறடா கேட்டுகொண்டால் அது செல்லாது என இந்த அறிவிப்பின் மூலம் வாதாடலாம்.
அதிமுக இடைக்கால பொது செயலாளராக நியமிக்கபட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால் மதுசூதனனின் இந்த அறிவிப்பு வலுப்பெறும்.இதனால் எடப்பாடி ஆட்சியை பெரும்பான்மையை நிருபித்து தொடர்ந்தாலும் அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.