
சட்டசபையில் பெரும் அமளிக்கிடையே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி அடைந்தார். இதனால் அவரது ஆட்சி தப்பித்தது.
சசிகலா , ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்த நிலையில் சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஏராளமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க வேண்டும் என உரிமை கோரினர்.
கவர்னர் அவர்களுக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் ஆரம்பம் முதலே எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் எனபதில் பல கருத்துகள் நிலவியது. எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் 11 நாட்களாக அடைத்து வைத்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டிவந்த நிலையில் பல எம்.எல்.ஏக்கள் தப்பி வந்தனர்.
இன்று காலை கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் வெளியேறினார். இதனால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தங்களது எம்.எல்.ஏக்களை பத்திரமாக காரில் ஏற்றி சட்டசபைக்கு அமைச்சர்கள் அழைத்து வந்தனர். சட்டசபை துவங்குவதற்கு முன்னர் சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் நடந்து சட்டமன்றத்திற்கு வரும் நிலை ஏற்பட்டதாக கூறினார். தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதிமுக ஓபிஎஸ் அணி கொறடா செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் திமுக , காங்கிரஸ் , ஓபிஎஸ் அணியினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்த்து அதிமுகவினரும் முழக்கமிட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வந்தது. இந்நிலையில் சபாநாயகர் அமைதி காக்கும் படி கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து இருபுறமும் கோஷமிட்டதால் சட்டசபையே போர்கோளம் போல் காட்சி அளித்தது.
இரண்டு முறை சபை ஒத்தி வைக்கப்படது. திமுக வெளியேற்றப்பட்டது. காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
தற்போது சட்டசபையில் 230 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் திமுக , காங்கிரஸ் 98 போக தற்போது 132 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனை அடுத்து தற்போது வாக்கெடுப்பு துவங்கியது.
குரல் வாக்கெடுப்பு தான் மரபு என குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை நிருபித்துள்ளதால் எடப்பாடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.