
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழாவில் கலந்துகொண்டு முதல்வர் பழனிச்சாமி புனித நீராடினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகாபுஷ்கரம் விழா வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் எந்த ராசிக்கு பெயர்கிறதோ அந்த ராசிக்கான நதியில் புஷ்கர விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வதால் துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் மகாபுஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபுஷ்கர விழாவில் மக்கள் நீராடுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 13-ம் தேதி 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி வழியாக மயிலாடுதுறையை அடைந்துள்ளது.
இந்நிலையில், காவிரி மகாபுஷ்கர விழாவில் கலந்துகொண்டு இன்று காலை முதல்வர் பழனிச்சாமி புனித நீராடினார். முதல்வருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் ஆகியோரும் புனித நீராடினர். 18 எம்.எல்.ஏக்கள் தனக்கு எதிராகவும் தினகரனுக்கு எதிராகவும் உள்ளதால் ஆட்சியையும் தனது பதவியையும் காப்பாற்ற வேண்டி முதல்வர் புனித நீராடினர் என கூறப்படுகிறது.
மயிலாடுதுறைக்கு வந்த முதல்வரை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முதல்வரின் வருகையையொட்டி ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து நாகையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார்.