தப்பித்தது எடப்பாடி அரசு..! தவிடு பொடியான தி.மு.க. மற்றும் தினகரன் கட்சிகளின் கணக்குகள்!

First Published Apr 27, 2018, 8:16 PM IST
Highlights
edapadi govt sustained anyhow by ops 11 mla judgement


தப்பிப் பிழைத்தது எடப்பாடி அரசு: தவிடு பொடியான தி.மு.க. மற்றும் தினகரன் கட்சிகளின் கணக்குகள்!

முரண்பாடுகள் மற்றும் புதிர்களின் கூடாரமாகிவிட்டதுதான் அ.தி.மு.க. அரசு. ஆனாலும் கூட தடைகளை தாண்டித் தாண்டி அது தப்பிப் பிழைத்து வருவதுதான் எடப்பாடியின் ஜாதகத்தில் எங்கோ செமத்தியான அதிரஷ்டப்புள்ளி அழுத்தமாய் இருப்பதைக் காட்டுகிறது. 

ஜெயலலிதா மரணித்ததும் மீண்டும் முதல்வராக்கப்பட்ட பன்னீர்செல்வம் திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டு ‘தர்ம யுத்தம்’ ஆரம்பித்தது நடத்திய அரசியல்கள், சசிகலாவின் பூரண ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி அரியணையில் அமர்த்தப்பட்டதெல்லாம் அதோ குல்பி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குட்டிப் பாப்பாவுக்கும் கூட தெரியும். 

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பன்னீர் நடத்திய முற்றுகைகளின் நீட்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பே சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக வாக்களித்தது பன்னீர்செல்வம் உள்ளிட்ட பதினோறு எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய டீம். ஆனால் அப்போது தப்பிப் பிழைத்தது எடப்பாடியின் அரசாங்கம். 

இதன் மூலம் பன்னீரையும் அவரது சகாக்களையும் தங்களின் ஜென்மப் பகைவர்களாக பார்த்தது எடப்பாடி அணி. இந்நிலையில் வடக்கு திசையிலிருந்து வந்த உத்தரவை ஏற்று இரு அணிகளும் இணைந்து கைகுலுக்கிக் கொண்டன. எந்த அரசை கவிழ்த்த எதிர்த்து வாக்களித்தாரோ அதே அரசாங்கத்தின் துணை முதலமைச்சராக வந்தமர்ந்து புல்லரிக்க வைத்தார் பன்னீர்செல்வம். 
இதில் கடுப்பான தி.மு.க. நீதிமன்றத்தை நாடியது.

அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் பன்னீர் அன்று கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பும், அதன் பின் நடந்த சமாச்சாரங்களையும் அடிப்படையாக வைத்து வழக்கு தொடர்ந்தார். அதுபாட்டுக்கு ஓரத்தில் நடந்து கொண்டிருந்த அந்த வழக்கில் திடுதிப்பென இன்று தீர்ப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்த தமிழகம் ‘பிரேக்கிங்! பிக் பிரேக்கிங்! பிக்கஸ்ட் பிரேக்கிங்!’ என்று சேனல்களை மாற்றி மாற்றியே இன்று காலையிலிருந்து மாய்ந்து போனது. 

இந்த வழக்கின் தீர்ப்பு பன்னீர்செல்வத்தின் டீமுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் மொத்தம் பனிரெண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இழப்பர், இதன் மூலம் அ.தி.மு.க.வின் பெரும்பான்மை சட்டமன்றத்தில் வெட்டவெளிச்சமாய் கவிழும்! அடுத்து தேர்தல் வரும்! செயல் தலைவர் செக்கச்செவக்க முதல்வராவார்! என கன்னாபின்னாவென கால்குலேஷன் போட்டது தி.மு.க. தினகரன் அணியோ ‘பன்னீர் அணி வெளியேறுவதன் மூலம் விழும் வெற்றிடத்தை நாம் முட்டுக்கொடுத்து ஆட்சியை காப்பாற்றி முதல்வர் பதவியை டிமாண்ட் செய்யலாமா?’ என்கிற லெவலுக்கு கணக்கு போட்டனர். 

அதேவேளையில் தி.மு.க. மற்றும் தினகரன் தரப்பை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் சிலர் நீலாங்கரையின் ஒதுக்குப்புற பங்களா ஒன்றில் கூடி ‘எங்க சைடுல 89, உங்க சைடுல 18’ என்றெல்லாம் புதுக்கணக்கு போட்டு புஸ்வானம் கொளுத்தியது தனிக்கதை. 

இப்படி பன்னீர்செல்வத்தின் வழக்கை வெச்சு ஆளாளுக்கு செவ்வெனே செய்து கொண்டிருந்தனர். ஏதோ ஒரு கணக்கு போட்டு எடப்பாடியாரும் சொந்த ஊருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஆக மொத்தத்தில் இன்று விடிந்ததில் இருந்து ஒவ்வொரு நொடியும் தமிழக அரசியல் பரமபதத்தில் ஹை லெவல் நகர்வுகளாகவே இருந்தன. ஏணிகளில் ஏறப்போகும் எடப்பாடி அரசை தள்ளித்தள்ளி பாம்பை நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தன தி.மு.க மற்றும் தினகரன் அணி நிர்வாகிகளின் ‘கருத்து மற்றும் விமர்சன விவாதங்கள்.’ 

பிற்பகல் 3 மணியை தாண்டியும் தீர்ப்பு வரவில்லை. ஒவ்வொரு நொடியிலும் பரபரப்பின் உக்கிரம் உச்சம் தொட்ட நிலையில் சட்டென்று தீர்ப்பு அறைக்குள் நுழைந்த நீதிபதிகள் செம்ம்ம சிம்பிளாய் பன்னீர் தரப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர். 

இந்த தீர்ப்பை கேட்டு, என் அரசியல் பிழைத்தது! என்று பன்னீர் கொண்டாட, என் ஆட்சி பிழைத்தது! என்று எடப்பாடியார் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். 

ஆனாலும் மேல் முறையீடு பூதம் கிளம்புமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

click me!