
சட்டமன்ற மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் இன்று 3வது நாளாக தொடங்கியது. கடந்த 4 நாட்களுக்கு முன் எம்எல்ஏ சரவணன், அதிமுகவில் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறிய வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதாடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நேரமில்லா நேரத்தின்போது கடந்த 2 நாட்களாக கேள்வி எழுப்பினார். இதனை சபாநாயகர் தனபால் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம், கூறியதாவது:-
சட்டமன்ற சபாநாயகரின் பணி என்ன...? எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், சபாநாயகர் தனபால், நேற்று ஒரு வார்த்தை இன்று ஒரு வார்த்தை பேசி அந்தர் பல்டி அடிக்கிறார்.... அந்தர் பல்டி.... (கிண்டலடித்தபடி சிரித்து கொண்டே கூறினார்)
நேற்று அவர் கேட்ட ஆதாரத்தை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதை, சபாநாயகரிடம் வழங்க வேண்டும் என மிகவும் பொறுமையுடன் காத்திருந்தார். அதை சபாநாயகர் வாங்கி பரிசீலிப்பதாக கூறியிருந்தாலும், ஏற்று கொள்ளலாம். ஆனால், அவர் அப்படி செய்யவே இல்லை. தரம் தாழ்ந்த சர்வாதிகாரியாக இருக்கிறார் சபாநாயகர் தனபால்.
இவ்வாறு அவர் கூறினார்.