அதிமுக எம்பிக்கள் இதையல்லவா செய்திருக்கணும்..? கடைசி நேரத்தில் ஐடியா கொடுக்கும் துரைமுருகன்

First Published Mar 29, 2018, 11:51 AM IST
Highlights
duraimurugan opinion about cm meet with ministers in cauvery issue


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை வாரியம் அமைக்கப்படாததால், இன்றைக்குள் அமைக்கப்பட வாய்ப்பில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன், முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், சாகப்போகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று கூவும் கதையாக, கெடு முடியும் கடைசி நாளான இன்று அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறார் முதல்வர். இந்த விவகாரத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் முதல்வர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதற்கு பிரதமர் கொடுக்கவில்லை. மற்ற கட்சி பிரதிநிதிகளை விடுத்து, முதல்வரும் துணை முதல்வருமாவது சென்று பிரதமரை சந்திருக்கலாம் அல்லவா?

பிரதமரிடம் சென்று, நாங்கதான் வந்துருக்கோம்; யாரும் வரலைனு சொல்லி பார்த்திருக்கலாமே? நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தி என்ன பயன்? அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டாமா? மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் பழனிசாமி அரசுக்கு கிடையாது. அந்த பயத்தில்தான் நிராயுதபாணியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் கையறு நிலையில் உள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு  பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்பார்கள் என கூறுவார்கள். வேறு என்ன சொல்லிவிட போகிறார்கள்?

திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் மத்திய அரசு, இதற்கு முன் கேட்டிருக்க கூடாதா? மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழகத்தை ஏமாற்றிவிட்டார்கள். 

அதிமுக அரசு, அவர்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் எங்களால் முடிந்ததை செய்திருப்போம். பிரதமரை இந்த ஆட்சியாளர்களால் பார்க்கவே முடியவில்லை. பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சென்றிருந்தால், இதற்குத்தான் உங்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தேனா என மோடி மிரட்டியிருப்பார். பிரதமரை சந்தித்து அதையாவது கேட்டுக்கொண்டு வந்திருக்கலாமே? அதைக்கூட செய்யவில்லையே? பிரதமரை சந்திப்பதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

கடைசி நேரத்திலும் கூட மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என  மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, காபி குடித்துவிட்டு வந்துவிடுவார்கள் என முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தை துரைமுருகன் விமர்சித்தார்.
 

click me!