கையாலாகாததனம்... அயோக்கியதனம்... ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு துரைமுருகன் காட்டம்!

By Asianet TamilFirst Published Dec 2, 2019, 10:15 PM IST
Highlights

இரண்டு கட்டங்களாகத் தேர்தலை அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, யாராவது நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்பட்டது போல உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தே தேர்தல் தேதி அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக தேர்தலை நடத்தாமல், பிரித்து நடத்துவது தமிழக அரசின் கையாளாகாததனம். உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் அறிவிப்பு அயோக்கியத்தனமானது என்று திமுக பொருளாளர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்தார்.
 “உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக தேர்தலை நடத்தாமல், பிரித்து நடத்துவது தமிழக அரசின் கையாளாகாததனம். உள்ளாட்சித் தேர்தலை ஆணையம் அறிவிப்பு அயோக்கியத்தனமானது. நகராட்சி, மாநகராட்சிகளுக்கு இந்த அரசு நிச்சயம் தேர்தலை நடத்தாது. இரண்டு கட்டங்களாகத் தேர்தலை அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, யாராவது நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்பட்டது போல உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தே தேர்தல் தேதி அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து தேர்தலைக்கூட இரண்டு கட்டங்களாக நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். இது வாக்குப்பதிவின்போது வன்முறைக்கும் ரவுடியிசத்துக்கும் வழிவகுக்கும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தலை ஆணையம் நடத்தட்டும். அதை சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். தேர்தலைக் கண்டு அஞ்சுகிற கட்சி அல்ல திமுக. மாநகராட்சி, நகராட்சிகளில் அதிகாரிகள் மூலம் இந்த அரசு கொள்ளையடித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் அவ்வாறு அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. எனவே, அதிமுகவினர் தேர்தலை நடத்தமாட்டார்கள். அதிமுக அரசு இன்று அறிவித்துள்ள அட்டவணைதான் இறுதி முடிவு என்றால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று துரைமுருகன் தெரிவித்தார்.

click me!