நிம்மதி பெருமூச்சுவிட்ட மத்தியஅரசு: 3 மாதங்களுக்குப்பின் ஜிஎஸ்டி வரிவசூல் எகிறியது....

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 9:17 PM IST
Highlights

3 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு சிறிது நிம்மதி ஏற்பட்டுள்ளது.
 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. 

ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. 

அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 3 மாத காலத்தில் மாதந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2018 நவம்பர் மாதத்தை காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். 2019 நவம்பர் ஜி.எஸ்.டி. வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.19,592  கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.49,028 கோடி மற்றும் செஸ் ரூ.7,727 கோடியும் அடங்கும்.

click me!