
இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றிதான் இது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தொண்டர்கள் மத்தியில் கண்ணீருடன் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமாக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் இழப்பால் தமிழகமே வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகள் பல. இதனால அவருக்கு தொண்டர்களும் பலர். எண்ணிலடங்கா இந்த தொண்டர்கள் வேதனையில் ஒரு புறம் துடித்துக்கொண்டிருக்கையில். அவரது ஆசையை நிறைவேற்ற போராடிக்கொண்டிருந்தது இன்னோரு கூட்டம்.
அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியான கலைஞர் தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட அண்ணாவின் அருகிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில் பெரிய தடையாக இருந்தது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு.
சட்டப்படி தான் எல்லாம் செய்ய முடியும் எனவே கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என அவர் மறுத்துவிடவே தொடர்ந்து கலைஞருக்காக போராடி வந்தனர் தொண்டர்கள்.
தொடர்ந்து அவசர கதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மெரினாவில் இடம் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவிற்காக தமிழகமே பேராவலுடன் காத்திருந்த இந்த தருணத்தில் தீர்ப்பு வந்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்து தமிழ்கத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய கலைஞருக்கு ஒருவழியாக மெரினாவில் அண்ணா சமாதியின் அருகே இடம் கிடைத்திருக்கிறது.
இந்த தீர்பை கேட்டு அங்கிருந்த ஸ்டாலின் உடைந்து அழுதிருக்கிறார். நீதிமன்றத்தில் இருந்த திமுகவின் முக்கிய அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே இந்த தீர்ப்பிஅனை கேட்டு அழுதிருக்கின்றனர்.
கலைஞரின் இழப்பினால் அனுபவிக்கும் வேதனை ஒருபக்கம். எங்கே அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பு மறுபக்கம் என தவித்த அவர்களுக்கு சாதகமாக வந்த இந்த தீர்ப்பு அவர்களின் கண்களில் நீரை வரவழைத்திருக்கிறது. போராடி கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்காக அவர்கள் நெகிழ்ந்த இந்த தருணம் அனைத்து தமிழ் உள்ளங்களையுமே நெகிழ செய்திருக்கிறது.
இதுகுறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில் இறந்தும் போராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னொரு வெற்றி இது என்றார்.