இந்த விஷயத்துல தயவு தாட்சண்யம் கிடையாது... அமைச்சர் வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்..!

By vinoth kumarFirst Published Apr 1, 2021, 5:58 PM IST
Highlights

அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக சார்பில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ், அமமுக சார்பில் கே.சி.வீரமணியின் அக்கா மகன் தென்னரசு சாம்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா ஜோலார்பேட்டை தொகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கார் ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா சோதனையிட்டபோது அதில், பல்வேறு பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 

இதனையடுத்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார். இதையடுத்து, ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அழகிரி (அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர்), கார் ஓட்டுநர், கார் உரிமையாளர், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் என 4 பேர் மீது ஜோலார்பேட்டை காவல் துறையினர் கடந்த 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியபோது, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலையீட்டால் அமைச்சர் கே.சி.வீரமணி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

click me!