திராவிடர் களஞ்சியம்... குழப்பங்களை உருவாக்க வேண்டாம்... தெளிவுபடுத்திய தங்கம் தென்னரசு..!

By Thiraviaraj RMFirst Published Sep 3, 2021, 11:02 AM IST
Highlights

திராவிடக் களஞ்சியம் என்றால் என்ன? திராவிடக் களஞ்சியம் எனத் தொகுப்பது ஏன்? என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

திராவிடக் களஞ்சியம் என்றால் என்ன? திராவிடக் களஞ்சியம் எனத் தொகுப்பது ஏன்? என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சங்க இலக்கிய வாழ்வியலை நூலாக வெளியிடுதல் மற்றும் திராவிடக் களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாகச் சில தவறான தகவல்கள் சிலரால் ஊடகங்களில் திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள சங்க இலக்கியத்தைத் தொகுப்பது தொடர்பான 10ஆவது அறிவிப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டது. முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பதாகும்.

இரண்டாவது அம்சம் கால்டுவெல் தொடங்கி எமனோ. பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள். திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்துக் கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள். கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்துத் திராவிடக் களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடப்படும் என்பதாகும்.

மேற்சொன்ன இரண்டு பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள். எனவே, அறிவிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!