மீண்டும் தார் சட்டியை தூக்கும் திராவிடர் கழகம்.. இந்தி எழுத்துகளை தார் பூசி அழிக்கும் போராட்டம் அறிவிப்பு.!

By Asianet TamilFirst Published Apr 29, 2022, 10:20 PM IST
Highlights

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற 1965-ஆம் ஆண்டிலும் பிறகு 1985-ஆம் ஆண்டிலும் மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்களை தார்ப் பூசி அழிக்கும் போராட்டங்களை திராவிடர் கழகம், திமுக ஆகிய கட்சிகள் முன்னெடுத்துள்ளன. 

சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற 1965-ஆம் ஆண்டிலும் பிறகு 1985-ஆம் ஆண்டிலும் மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்களை தார்ப் பூசி அழிக்கும் போராட்டங்களை திராவிடர் கழகம், திமுக ஆகிய கட்சிகள் முன்னெடுத்துள்ளன. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இந்திக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் கையில் எடுத்துள்ளது. 

இந்தி எழுத்துகள் அழிப்பு

இதுதொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து நாளை (ஏப்.30) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டம் குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விளக்கமும் அளித்துள்ளார்.

கி. வீரமணி அறிவிப்பு

இதுகுறித்து கி. வீரமணி ஏற்கனவே கூறுகையில், “புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்குமான கல்வி அல்ல. இதை படிப்பு தடுப்பு கல்விச் சட்டம் என்றே சொல்லலாம். என்இபி (NEP) என்பது நேஷனல் எஜுகேஷன் பாலிசி அல்ல, நோ எஜுகேஷன் பாலிசி ஆகும். ராஜாஜியின் பழைய குலக்கல்வித் திட்டத்தைத்தான் மீண்டும் தேசிய புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்கின்றனர். தாய்மொழிக்கு முக்கியத்துவம் எனக் கூறி மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம், இந்தியைப் பரப்ப வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டம். தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கிறது” என்று கி. வீரமணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளை இப்போராட்டம் நடைபெற உள்ளது.

click me!