தனியார்பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கேட்கும் டாக்டர் ராமதாஸ்!

By Asianet TamilFirst Published Jun 8, 2020, 7:52 AM IST
Highlights

 நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கு ஏற்கனவே தனிப்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. அத்துடன் இப்போது நகர்ப்புற தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் கிடைக்கின்றன. இவை எதுவுமே கிராமப்புற, அரசு பள்ளின் மாணவர்களுக்கு கிடைக்காத நிலையில் இரு தரப்பினரும் ஒரே தேர்வை எழுதினால், நகர்ப்புற, பணக்கார மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்; கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களை பெறுவார்கள். இது எந்த வகையில் சமநீதியாகவும், சமூக நீதியாகவும் இருக்கும்?
 

ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதன் நோக்கம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும் என்பதைவிட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதுதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. வகுப்பறைக் கல்வி முறைக்கு எந்த வகையிலும் ஈடாக முடியாத ஆன்லைன் கல்வி முறை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் புதிய உத்தியாக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கப்பூர்வமாக பயனளிக்காத இந்த முறையைப் பள்ளிக்கல்வித்துறை ஊக்குவிப்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் இயல்பான சூழலில் 2020-21ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. அதேநேரத்தில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. 
தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகமும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாக பள்ளிக்கல்வி இயக்ககமும் இருந்தாலும் கூட, மாநில பாடத் திட்டத்தை கடைபிடிக்கும் இரு வகை பள்ளிகளிலும் ஒரே பாடநூல்கள்தான் பயன்படுத்தப் படுகின்றன; ஒரே தேர்வு முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படாத நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் பாடம் நடத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமாக ஆகி விடாதா?
இவ்வாறு வினா எழுப்புவதன் நோக்கம், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது அல்ல. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான். ஆன்லைன் வகுப்புகள் எனப்படுபவை தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடு; அவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது பிற்போக்குத்தனம் இல்லையா என்று சிலர் வினா எழுப்பலாம். கல்வி என்பது அனைவருக்கும் சமமானது எனும் நிலையில், அதற்காக கையாளப்படும் எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அது கல்வி பெறும் அனைத்து நிலை மாணவர்களுக்கும் சாத்தியமாகக் கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எவ்வளவு சிறப்பான, நவீனமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதங்களே அதிகமாக இருக்கும்.


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களின் நிலை என்ன என்பதை பார்ப்போம். கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள்; படிப்பறிவு இல்லாதவர்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் செல்பேசிகள் தேவை. ஒரு வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் இரண்டு தொலைபேசிகள் தேவை. கிராமப்புறங்களில் வாழும் பெரும்பான்மையான பெற்றோர் சாதாரண வகை செல்பேசிகளைத்தான் பயன்படுத்துவார்கள்; அவர்களிடம் ஸ்மார்ட் செல்பேசிகள் இருக்க வாய்ப்பில்லை. கல்விக்கட்டணமே செலுத்த வசதியில்லாத அவர்களால் இரு குழந்தைகளுக்கும் தலா ரூ.10,000 செலவில் தனித்தனி செல்பேசிகளை வாங்கித் தருவது சாத்தியமில்லை. அத்தகைய மோசமான சுழலில் அவர்களின் குழந்தைகளால் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் இணைய முடியும்?


அதுமட்டுமின்றி, நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கு ஏற்கனவே தனிப்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. அத்துடன் இப்போது நகர்ப்புற தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் கிடைக்கின்றன. இவை எதுவுமே கிராமப்புற, அரசு பள்ளின் மாணவர்களுக்கு கிடைக்காத நிலையில் இரு தரப்பினரும் ஒரே தேர்வை எழுதினால், நகர்ப்புற, பணக்கார மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்; கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களை பெறுவார்கள். இது எந்த வகையில் சமநீதியாகவும், சமூக நீதியாகவும் இருக்கும்?
இதற்கெல்லாம் மேலாக ஆன்லைன் வகுப்பு எனப்படுபவை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு வருகின்றன. பல பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதே இதற்கு சாட்சி. ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதன் நோக்கம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும் என்பதைவிட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதுதான். வகுப்புகளைத் தொடங்காவிட்டால் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை விட, கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாது என்று கூறி பெற்றோரிடம் பணம் பறிப்பதுதான் அதிகமாக நடக்கிறது.

​​​​​​​
கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில், பணம் செலுத்தாத குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறிய செய்தியை பகிர்ந்ததற்காக 100 மாணவர்களை பள்ளியிலிருந்து நிர்வாகம் நீக்கியிருக்கிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. வகுப்பறைகளில் உயிர்ப்புடன் நடத்தப்படும் பாடங்களில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் ஆன்லைன் வகுப்புகளால் வழங்க முடியாது என்பதுதான் உண்மை. ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவர்கள் பாடங்களை படிக்காததாலோ எந்த பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
அதற்கு மாற்றாக, பள்ளிகள் எவ்வளவு தாமதமாக திறக்கப்படுகின்றனவோ, அதற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!