கமல், எடப்பாடி என யாரையும் விடாத ராமதாஸ்... பற்றவைத்த 10 கேள்விகளுக்கும்.... பக்காவான 10 விடைகள்!

By sathish kFirst Published Oct 2, 2018, 5:04 PM IST
Highlights

மிகவும் தரம் தாழ்ந்து போயிருக்கிறது. மக்களுக்காக எந்த தியாகமும் செய்யாதவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

1. இன்றைய தமிழக அரசியல் பற்றி...?

மிகவும் தரம் தாழ்ந்து போயிருக்கிறது. மக்களுக்காக எந்த தியாகமும் செய்யாதவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. திரைப்படங்கள் மூலம் சமூகத்தை சீரழிக்கும் கருத்துகளைக் கூறியவர்கள், இப்போது தங்களால் தான் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கூச்சமின்றி கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தன்னலமற்ற இளைஞர்கள் நல்ல கொள்கையுள்ள கட்சியில் சேர்வதன் மூலம் தான் இந்த நிலைமையை மாற்ற முடியும்.

2. மகாத்மா 150?

* இயேசுநாதர், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோர் எப்படி அவதூறுகளையும், வீண் பழிகளையும் தாங்கிக் கொண்டு மக்களுக்காக உழைத்தார்களோ, அதேபோல் தான் மகாத்மாவும் மக்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை உழைத்தார். அகிம்சையை போதித்தார். அதனால் தான் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கருப்பர் இன விடுதலைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் ஆகியோர் மகாத்மாவின் நேசன்கள் ஆனார்கள். மகாத்மாவை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவரது கொள்கைகளுக்கு தோல்வி இல்லை.

3. இந்த பத்தாண்டின் ஆகச் சிறந்த பொய் என்ன?

* வேறென்ன... ‘எங்கள் ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்ற வசனம் தான்.

4. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. ஆனால், அது வாக்காக மாறவில்லையே ஏன்?

* நல்ல கேள்வி. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை மக்கள் நேசிக்கிறார்கள். திட்டங்களை மக்கள் பாராட்டுகிறார்கள். பா.ம.க. அனைவருக்குமான கட்சியாக மாறி வருகிறது. மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்து விடுவதில்லை. நிச்சயம் அடுத்த தேர்தலில் மக்கள் போட்டிப் போட்டு பா.ம.க.வுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்படும். இது உறுதி.

5. 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்க வழக்கில் எப்போது தீர்வு வரும் என நினைக்கிறீர்கள்?

* வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி அலுவல் சார்ந்த வேறு பணிகள் காரணமாக இந்த மாதம் 25-ஆம் தேதி வரை வழக்கு விசாரண, தீர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாட்டாராம். ஆக, அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த வழக்கில் தீர்ப்பு வராது போலிருக்கிறது.

6. தில்லி வரை சென்று தமிழக அமைச்சர்கள் பேச்சு நடத்தினார்களே.... தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு தீர்ந்து விட்டதா?

* அமைச்சர்கள் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிலக்கரி தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை. நிலக்கரி இல்லாததால் மேட்டூர் அனல் மின்நிலையத்தின் 210 மெகாவாட் பிரிவில் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

7. உத்தர்காண்டில் வீடுகளில் கழிப்பறை இல்லாதவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறதே?

* நோக்கம் வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஆனால், வழிமுறை ஏற்கத்தக்கதல்ல. அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றாமல் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.

8. பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்களில் ஒருமுறை எடுக்கப்படும் பணத்துக்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டிருக்கிறதே?

* எல்லாம் டிஜிடல் இந்தியா செய்யும் மாயம். எடுக்கப்படும் பணத்தின் அளவு குறைக்கப்பட்டதால், அதற்கு இணையாக ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதற்கான எண்ணிக்கை இரட்டிப்பு ஆக்கப்பட வேண்டும். அதை வங்கிகள் செய்யுமா?

9. தொடர்வண்டிகளில் அசைவ உணவு சாப்பிடுவோருக்கும், சைவ உணவு சாப்பிடுவோருக்கும் தனித்தனியே இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே?

* இது மிகவும் ஆபத்தான கோரிக்கை. தொடர்வண்டிப் பயணம் வழக்கமாக புதிய நண்பர்களை உருவாக்கிக் கொடுக்கும். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் தொடர்வண்டிப் பயணம் எதிரிகளைத் தான் உருவாக்கிக் கொடுக்கும்.

10. பிக்பாஸ் பற்றி?
* காலம் விலைமதிப்பற்றது என்பது எனது கருத்து. நான் ஒரு போதும் நேரத்தை வீணடித்தது கிடையாது. அதனால் நீங்கள் கேள்வி கேட்கும் பொருள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

click me!