இந்த வருஷம் நீட் தேர்வே கூடாது... ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு... டாக்டர் ராமதாஸ் தீர்க்கமான யோசனை!

By Asianet TamilFirst Published Jun 24, 2020, 9:32 PM IST
Highlights

ஜூலை மாதம் 15-ம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.
 

கொரோனா குறையாத நிலையில், மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும்கூட, மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களிலும், மாநகரப்பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை சீரடையும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாததாலும், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாலும் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்ததை அடுத்து இந்த முடிவை சி.பி.எஸ்.இ வாரியம் எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26-ம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும். ஜூலை மாதம் 15-ம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.


எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!