அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு எஸ்கேப்..? மாஜி எம்.பி. மைத்ரேயன் அதிரடி விளக்கம்..!

By Asianet TamilFirst Published Aug 20, 2020, 8:13 AM IST
Highlights

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களை அதிரடியாக மறுத்துள்ளார் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் மைத்ரேயன். 

20 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்தவர் டாக்டர் மைத்ரேயன். அவருக்கு 3 முறை ராஜ்ய சபா எம்.பி.யாக ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாவதற்கு மைத்ரேயன் முயற்சி மேற்கொண்டார். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் முயற்சி மேற்கொண்டார். இந்த இரண்டுமே அவருக்கு ஈடேறவில்லை. தற்போது மாநில அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள மைத்ரேயன், சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்திவருகிறார்.


இந்நிலையில் டாக்டர் மைத்ரேயன் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் உலாவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இத்தகவல்களை மைத்ரேயன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவ்ர் கூறுகையில், “நான் அதிமுகவில்தான் இருக்கேன். அதிமுகவில் மகிழ்ச்சியாத்தான் இருக்கேன். வேறு எங்கும் நான் போகல. யார் இந்த வதந்தியை கிளப்பிவிட்டாங்கன்னு தெரியல. இந்த வதந்திக்கெல்லாம் பதில் சொல்றதே தேவையில்லாதது. அந்த வதந்தியின்படி நான் பாஜகவுக்கு போகலைன்னா, அது பொய்யுன்னு உறுதியாயிடும் இல்லையா” என்று மைத்ரேயன் தெரிவித்தார்.
அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்தவர் மைத்ரேயன். மீண்டும் அணிகள் இணைந்தபிறகு, அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மைத்ரேயனை போல ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் எம்.பி. விழுப்புரம் லெட்சுமணன், சில தினங்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமானார். இந்நிலையில் மைத்ரேயன் பற்றி இந்த வதந்தி கிளம்பியுள்ளது. 

click me!