
மீனவர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும், இத்தகைய அராஜ போக்கில் ஈடுபட்ட இலங்கை அரசை கண்டிப்பதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போதெல்லாம் இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், வலைகளை அறுப்பதும், துன்புறுத்துவதும் வாடிக்கையாக இருந்தது.
ஜெயலலிதா ஆட்சியில் அவையெல்லாம் கட்டுபடுத்தபட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் மீனவர்களின் துன்பங்களை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான நிவாரண தொகையை வழங்கி அவர்களின் கண்ணீரை துடைத்தவர் ஜெயலலிதா.
தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அட்டூழியம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
தமிழக மீனவர் ஒருவர் சுட்டுகொல்லப்ட்டிருக்கிறார். ஒருவர் படுக்காயமடைந்திருக்கிறார். இத்தகைய அராஜக போக்கினை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்துவதோடு இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்.
மேலும் இரக்கமே இல்லாத இலங்கை கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.