
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியிருக்கக் கூடாது என்றும் இது தனக்கு உடன்பாடில்லை என்றும் நடிகர் சிம்பு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததை கண்டித்து சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பாரதி ராஜா விடுவிக்கப்பட்ட போதும், சீமான் விடுவிக்கப்படவில்லை.
ஏற்கனவே, ஐபிஎல் க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் பரவின.
இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார். ஆனால், மன்சூர் அலிகானை மண்டபத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், தொடர்ந்து மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் இன்று வரை மன்சூர் அலிகான் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானை சிறையில் அடைத்தது ஏன் என தெரிந்து கொள்ள ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் சிம்பு இன்று வந்தார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் தனக்கு உடன்பாடில்லை என கூறினார்.. ஐ.பி.எல். போராட்டத்தின் போது கடமையை செய்ய வந்த காவலரை தாக்கியது தவறு என கருத்துத் தெரிவித்த சிம்பு; அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது என கூறினார்.
.தொடர்ந்து பேசிய அவர், மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் , மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சிம்பி தெரிவித்தார்.
ஏற்கனவே சீருடை அணிந்த காவலர்களை அடித்தது தவறு என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்காக பாரதிராஜா,சீமான், அமீர், கௌதமன் உள்ளிட்ட வல தமிழ் ஆர்வலர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.