
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த இழிவான அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், எஸ்.வி.சேகரின் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் ஆளுநர் கை வைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த பெண் பத்திரிகையாளரும் இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு எதிர்வினையாக பதிவிடுவதாக கருதி, பெண் பத்திரிகையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் மோசமாக எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அதற்கு விளக்கம் தெரிவித்தும் மன்னிப்பு கோரியும் எஸ்.வி.சேகர் அறிக்கை வெளியிட்டார். தனது நண்பரின் பதிவை படித்து பார்க்காமல் பதிவிட்டுவிட்டதாகவும், பிறகு அதை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்த எஸ்.வி.சேகர், அதற்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.
எனினும் அவதூறான இழிவான கருத்தை பதிவிட்டு, பிறகு நீக்கிவிட்டு மன்னிப்பு கோரினால் சரியாகிவிடுமா? என்று கேள்வியும் எழுப்பப்படுகிறது. அவர் மன்னிப்பு கேட்டாலும், அவருக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்தே வருகின்றன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துவிட்டு, பிறகு அதை நான் எழுதவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் ஒருமுறை கருத்தை பதிவிட்டுவிட்டால், அது பரவிக்கோண்டே தான் இருக்கும். எஸ்.வி.சேகரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை இழிவுபடுத்தினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகிறேன். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் ஏற்பட பாஜக முயன்று வருகிறது. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், தவறான கருத்துகளை பதிவிட கூடாது என தமிழிசை வலியுறுத்தினார்.