குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு கொடுக்கும் ரம்ஜான் நோன்பு கஞ்சியை பெறப்போவதில்லை என பள்ளிவாசல் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி அந்தந்த பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். அரசு அளிக்கும் அரிசியை ஒவ்வொரு மசூதியில் இருந்தும் வீடுகளுக்கு ஜமாத் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை, அனைத்து மசூதிகள் நிர்வாகத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வரும் 19ஆம் தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த அரிசியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என சில பள்ளிவாசல்கள் தீர்மானம் போட்டுள்ளன. இதுகுறித்து திருத்துறைபூண்டியை சேர்ந்த ஜமாத் காரர்கள் கூறுகையில், ‘’திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஜமாத்தார்கள் இன்று ஒன்றுகூடி அரசு வழங்கும் அரிசி வாங்க கூடாது என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். என்னவென்றால் வரக்கூடிய ரமலான் மாதத்தில் காலங்களில் அரசாங்கம் சலுகை அடிப்படையில் வழங்கக்கூடிய நோன்பு கஞ்சி கான அரிசியை வாங்குவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள். காரணம் என்னவென்று சொன்னால் மத்திய அரசு கொண்டுவந்து இருக்கக்கூடிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தமிழகத்தில் என்.ஆர்.சி., என்.பி.ஆர் -ஐ நடைமுறைபடுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை நாங்கள் எடுத்து வைக்கின்றோம். ஆகையால், சலுகை அடிப்படையில் தரக்கூடிய இந்த நோன்பு கஞ்சி அரிசியினை தமிழக அரசிடமிருந்து ஏற்கப் போவதில்லை என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முடிவு செய்திருக்கின்றன’’ எனத் தெரிவித்துள்ளனர். இவர்கள் அரிசியை வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரம்ஜான் அரிசியை வாங்க மறுக்கும் அவர்கள், தமிழக அரசு கொடுத்த 1000 ரூபாயையும் திரும்பி வழங்குவார்களா? என கேள்வி எழுப்புகின்றனர்.