சமூக நீதி திமுகவுக்கு சொந்தமா.? இல்ல அந்தக் குடும்பத்துக்கு சொந்தமா.? ரவுண்டு கட்டும் வி.பி.துரைசாமி.!

By Asianet TamilFirst Published Aug 2, 2021, 10:11 PM IST
Highlights

சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குடும்பத்துக்கோ சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
 

சென்னையில் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீண்ட காலமாக அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படாமல் இருந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, சமூக நீதிக் காவலராக பிரதமர்  நரேந்திர மோடி உள்ளார். இதன்மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்பை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இதற்கு மாணவர்கள் மீது மத்திய அரசு கொண்ட அக்கறையே காரணம்.
பாஜக இடஒதுக்கீட்டுக்கு எதிராக எப்போதும் இருந்தது இல்லை. அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. அதே சமயம் இந்த அறிவிப்பு தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டதும் அல்ல. சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குடும்பத்துக்கோ சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சி அமைத்து 85 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஒரே கட்சி திமுகதான்.
விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்து, தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை திமுக ஆட்சி நிரூபிக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழர் நலனை காப்பதில் பாஜக பாரபட்சமின்றி நேர்கோட்டில் உள்ளது. அதை தஞ்சையில் வரும் 5ஆம் தேதி போராட்டம் நடத்துவதன் மூலம் காட்டியுள்ளோம். தமிழக விவசாயிகளின் உரிமையை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று வி.பி.துரைசாமி தெரிவித்தார். 

click me!