விளம்பரத்துக்காக செய்கிறார்.. பொழுதுபோக்காக பேசுகிறார்.. அண்ணாமலையை கலாய்த்து தள்ளிய திமுக கூட்டணி கட்சி.!

By Asianet TamilFirst Published Mar 23, 2022, 8:39 AM IST
Highlights

"ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்றவுடன்  பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியது ஏற்க முடியாது. இது கடும் கண்டத்துக்குரியது ஆகும். இதை திரும்ப பெற வேண்டும்”.

தமிழகத்தில் சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுகின்றன. ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்ம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அரசியல் 

ஈரோட்டில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வழங்கிய வாக்குறுதிகளை மிகுந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவேற்றி வருகிறது. இல்லத்தரசிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்தது தவறாகும். இது அரசியல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் முயற்சி ஆகும். மேகதாது அணை பிரச்சனையில்  நடுநிலையோடு செயல்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

ஆளுநருக்கு அறிவுரை

தமிழகத்தில் சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடைபெறுகின்றன. ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்ம் தேவை. அதை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே முதல்வர் நிறைவேற்ற வேண்டும். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை இன்னும் குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. தமிழக மக்களையும் சட்டப்பேரவையையும் மதித்து ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். தாலிக்கு தங்கம் திட்டம் என்பது திருமண உதவி திட்டம் கிடையாது. பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். தற்போது  உயர்கல்வி கல்வி படிக்கும் பெண்களுக்கு மாத உதவித்தொகை அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். 

தேர்தல் முடிந்தது.. விலை உயர்ந்தது

அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உயர்கல்வி படிக்கும்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்திப்பது ஒன்றும் பெரிய  விஷயம் இல்லை. விளம்பரத்துக்காகப் பல்லேறு விஷயங்களை அண்ணாமலை செய்து வருகிறார். பொழுதுபோக்காகப் பேசுகிறார். ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்றவுடன்  பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியது ஏற்க முடியாது. இது கடும் கண்டத்துக்குரியது ஆகும். இதை திரும்ப பெற வேண்டும்” என்று முத்தரசன் தெரிவித்தார்.

click me!