
பூங்காக்களுக்கும், தி.மு.க.வுக்கும் கண்ணுக்கு புலப்படா பந்தம் ஒன்று உண்டு!...
தி.மு.க. பிறந்தது சென்னை ராபின்சன் பூங்காவில். அந்த தாய்க்கழகத்தின் முதுகெழும்பாக பிற்காலத்தில் மாறிப்போன இளைஞரணி பிறந்தது மதுரை ஜான்சிராணி பூங்காவில். அப்பேர்ப்பட்ட இளைஞரணியின் அமைப்புக்குழுவை பேராசிரியர் அறிவித்தபோது அதில் ஸ்டாலின், திருச்சி சிவாகுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தவர் பரிதி இளம் வழுதி. அப்பேர்ப்பட்ட மரியாதையை அவருக்கு அளித்திருந்தது தி.மு.க.
தமிழகமெங்கும் சுற்றி வந்து இளைஞர் அணியில் இடம் பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் மிக முக்கிய பணி இந்த அமைப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டது. அம்பாரமாய் குவிக்கப்பட்டிருக்கும் நெல்லில் இருந்து சிறு சிறு அரிசிகளை பிரித்தெடுப்பது போல் மிகக்கடினமான இலக்கை ஸ்டாலின் தலைமையில் செய்து இளைஞரணியை கட்டி எழுப்பியது அந்த குழு. ஆக இளைஞரணியை எழுப்பிக் கொண்டுவரும் பணியை அநாயசமாய் செய்து முடித்ததில் பரிதி இளம்வழுதியின் பங்கு மிகப்பெரிது, இதற்காக கழகம் அவருக்கு கொடுத்த வெகுமதிகளோ அதனினும் பெரிது. எழும்பூரின் மன்னனாகவே தொடர்ந்து அவரை அமர வைத்து அழகு பார்க்க வேறெந்த கட்சிக்கு மனம் வரும்? ஆனால் தி.மு.க. செய்தது.
இளைஞரணியில் ஸ்டாலினின் வலது கரமாகி போன பரிதிக்கு 1984 பொதுத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியை வழங்கியது தலைமை. நின்றார், வென்றார். அதற்கடுத்த தேர்தலில் எழும்பூர் தொகுதியில் அவரை நிறுத்தியது. அங்கே வென்றது மட்டுமில்லை! அமர்ந்தார், செட்டிலானார், கிட்டத்தட்ட குறுமன்னனாகவே ஆனார் பரிதி. ஆம் 1989 முதல் 2006 வரை ஆறு சட்டமன்ற தேர்தல்களில் இங்கேயே நிறுத்தப்பட்டு வென்றார். 2011லும் இவருக்கு இங்கே சீட் கொடுத்தது தலைமை. நின்றார் ஆனால் தே.மு.தி.க.விடம் தோற்றார்.
பேச்சாற்றலிலும், ஈர்ப்பதிலும் வல்லவர் பரிதி. இதனால் இவரை துணை சபாநாயகராகவும், அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தனர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் இருவரும். அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்கட்சியாய் தி.மு.க. இருந்தபோது சட்டமன்றத்தில் தீரமாக செயல்பட்டதற்காக இந்திரஜித், வீர அபிமன்யூ என்று புகழப்பட்டவர்தான் பரிதி.
சென்னையை பொறுத்தவரையில் பரிதியின்றி கழக விழா எதுவும் நிகழாது. ஸ்டாலினிடமிருந்த செல்வாக்கால் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி என எல்லா மண்டலங்களிலும் பரிதிக்கென்று தனி மரியாதை இருந்தது.
ஆனால் எந்த ஆயுதத்தால் நாம் தொடர்ந்து வெல்கிறோமோ சில வேளைகளில் அதே ஆயுதத்தால் நாம் வீழவும் செய்வோம். என்னதான் இளைஞரணி மூலம் ஸ்டாலினிடம் நெருக்கமிகு மனிதராக பரிதி இருந்தாலும் கூட அவரை தாண்டி கருணாநிதியும் பரிதி மீது அளவில்லாத பற்றுதல் வைத்திருந்தார். இது ஒரு கட்டத்தில் ஸ்டாலினுக்கு இடைஞ்சலை தந்தது அல்லது தருவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. இது நகமும் சதையுமாக இருந்த ஸ்டாலினுக்கும், பரிதிக்கும் இடையில் ஒரு நகப்புண்ணை உருவாக்கி வேதனையை கொடுத்தன.
குறிப்பாக தலைவருக்கு அடுத்து தளபதிதான் எனும் நிலை தி.மு.க.வில் உருவாக ஆரம்பித்தபோது அதை சற்றே வெளிப்படையாகவும், வலுவாக திரைமறைவிலும் எதிர்த்த முக்கிய புள்ளிகளில் பரிதியும் ஒருவர். இப்படி உருவான மோதல் வழுத்து வழுத்து கடைசியில் வழுதியை அ.தி.மு.க.வில் கொண்டு போய் நிறுத்தியது. ஜெ.,வின் கடந்த ஆட்சியின் போது அ.தி.மு.க.வில் இணைந்தார். ஸ்டாலினை கடுப்பேற்ற, வந்த கையோடு அவருக்கு உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பதவி கொடுத்தார் ஜெ.,
தி.மு.க. இளைஞரணியில் கோலோச்சியவர் பின் அங்கே கோவித்துக் கொண்டு வயதான நிலையில் அ.தி.மு.க. வந்து சேர்ந்தார். பரிதி இளம்வழுதியின் நிலை ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பரிதாப இளம்ழுதியாகிவிட்டது.
ஜெ மறைவுக்குப் பின் சாதகமான சூழல் கிடைக்காமல் அல்லாடியவர் பன்னீர் புரட்சி மேளா ஆரம்பித்ததும் அங்கே சென்றார். ஆனால் முணுசாமி, மாஃபா போன்றோருடன் ஈடுகொடுத்து அங்கே அரசியல் செய்ய முடியாதவர் நேற்று தினகரனை நாடி வந்திருக்கிறார். வந்த கையோடு ‘சிவாஜி கணேசனை விட பெரிய நடிகர் ஓ.பன்னீர்.’ என்று நக்கல் விமர்சனத்தையும் தட்டியிருக்கிறார்.
பன்னீர் சிவாஜி கணேசனோ அல்லது ஜெமினி கணேசனோ! ஆனால் பரிதியின் நிலை இப்படி கைப்புள்ள, ஸ்டைல்பாண்டி அளவுக்கு போயிருக்க கூடாது.