
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது.
சட்டசபை கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் ஏற்கனவே நடைபெற்றது.
இதில், சட்டசபை கூட்டத்தொடரை வருகிற 14-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 19-ந்தேதி வரை 24 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் எனவும் தினமும் கேள்வி நேரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் எனவும், சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
இதையடுத்து ஏற்கனவே ஒரு அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், நாளை மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், மானிய கோரிக்கைகள், ஜி.எஸ்.டி, நீட் தேர்வு விவகாரம், குறுவை சாகுபடி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.