ஜெயலலிதாவின் நிழல் என்ன செய்துகொண்டிருக்கிறது தெரியுமா...? ஒரு செம்ம ஷாக் ரிப்போர்ட்..!

By Vishnu PriyaFirst Published Apr 1, 2019, 3:32 PM IST
Highlights

அரசர்கள் வீழ்ந்து, மாற்று மன்னவன் வந்த பின் பட்டத்து யானைகள் பழைய பூனைகள் ரேஞ்சுக்கு பரிதாபமாக்கப்படுவது வாடிக்கை. ஜெயலலிதாவின் தர்பாரில் பட்டத்து யானை போல் வலம் வந்த பூங்குன்றன் அவர் மறைவுக்குப் பின் இப்போது வீட்டுப் பூனை போல் சாதாரணப்படுத்தப்பட்டு போயிருப்பது, அரசியலின் ‘தலைகீழ் விதி’யை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

அரசர்கள் வீழ்ந்து, மாற்று மன்னவன் வந்த பின் பட்டத்து யானைகள் பழைய பூனைகள் ரேஞ்சுக்கு பரிதாபமாக்கப்படுவது வாடிக்கை. ஜெயலலிதாவின் தர்பாரில் பட்டத்து யானை போல் வலம் வந்த பூங்குன்றன் அவர் மறைவுக்குப் பின் இப்போது வீட்டுப் பூனை போல் சாதாரணப்படுத்தப்பட்டு போயிருப்பது, அரசியலின் ‘தலைகீழ் விதி’யை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. 

பூங்குன்றன் சங்கரலிங்கம்...புலவர் சங்கரலிங்கத்தின் மகன். ஜெயலலிதாவுக்கு ஒரு பர்ஷனல் செகரெட்டரி தேவைப்பட்டபோது நல்லோர் சிலரின் வழிகாட்டுதல் படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் பூங்குன்றன். பார்த்த மாத்திரத்தில் பாசம் வைக்கும் குழந்தை முகம், பணிவு, தீர்க்கமான புத்தி என்று ஜெயலலிதாவின் அன்புக்கு பாத்திரமாகி அவரது நிழலாகவே ஆகிப்போனார் பூங்குன்றன்.

பொதுவாக ஜெயலலிதாவின் சுவாசக்காற்று கூட சசிகலாவின் அனுமதி பெற்றுதான் சென்று  திரும்பும். ஆனால் பூங்குன்றன் விஷயத்தில் மட்டும் அது சாத்தியப்படவில்லை. சசியையும் தாண்டி ஜெ.,விடம்  இவரால் நெருங்கி நிற்க முடிந்தது என்றால் ஜெயலலிதா இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும், இவர் காட்டிய அப்பழுக்கற்ற விசுவாசமும்தான். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் காலங்களும், காட்சிகளும் மாறிய நிலையில் பூங்குன்றன் ஒரு முறை ரெய்டு, விசாரணை என்றாக்கப்பட்டார். அவர் சசி ஆதரவாளர் ஆகிறாரா? தினகரனின் கைப்பாவை ஆகிறாரா! அல்லது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியில் இணைகிறாரா? என்றெல்லாம் விவாதம் நடந்து மறைந்தது. ஆனால் எதற்கும் அலட்டிக் கொள்ளாத பூங்குன்றன் ஆன்மிக  பாதையை தேர்வு செய்து கோயில், குளமாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார். 

ஜெயலலிதா இந்நேரமும் உயிரோடு இருந்திருந்தால் பூங்குன்றனின் ப்ரொஃபைலே வேறு லெவலில் இருந்திருக்கும். ஜெ.,வின் பிரசார  பயணங்களில் கைகளில் ஃபைல்களும், டைரியுமாய் பவ்ய குழந்தையாய் மேடையின் இடது புறத்தில் நின்று கொண்டிருந்திருப்பார் குன்றன். அம்மாவின் கண் அசைவை கவனித்த நொடியில் அவரது தேவையை நிறைவேற்றி, நல்ல பிள்ளையாய் சேவகம் செய்து கொண்டிருந்திருப்பார். ஏதாவது அமைச்சர் அல்லது நிர்வாகிகளை ஜெயலலிதா சந்திக்க வேண்டினால், பூங்குன்றனிடம் சொல்லித்தான் அவர்களை வரச்சொல்வார். பூங்குன்றனிடமிருந்து போன் வந்தாலே ஏதோ ஜெ.,விடமிருந்து அழைப்பு வந்தது போல் பதறிக் கொண்டு எழுவர் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள். நல்ல சேதியோ, பதவி பறிபோன சேதியோ எதுவாக இருந்தாலும் ‘ஒண்ணுமில்ல....’ என்றபடிதான் பேச்சை துவக்குவார் பூங்குன்றன். 


அப்பேர்ப்பட்ட குன்றன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? தன் வீட்டில் அமர்ந்து தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்து, மனைவிக்கு சமையலில் உதவிக் கொண்டிருக்கிறார். ஆளுக்கொரு மரம் வளர்க்க சொல்லி முகநூலில் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் என்னென்னவோ....

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வந்தவர்  ‘இப்போதைக்கு நான் எதுவும் பேசமாட்டேன். ஆனால் காலம் வரும்போது பல விஷயங்களை வெளியிடுவேன்’ என்றார். இதன் மூலம் புயலாய்ப் பார்க்கப்பட்ட பூங்குன்றன் இப்போது இப்படி வெண்ணெய் எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. 
வெண்ணெய்க்கு பின்னே ஏதோ விவகாரம் இருக்குமோ?

click me!