மேற்கு வங்கத்தில் பாஜகவை பழிவாங்க இதை பண்ணுங்க... மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு..!

By Asianet TamilFirst Published Apr 10, 2021, 9:35 PM IST
Highlights

மேற்கு வங்காளத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
 

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்குத் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், கூச்பெஹார் மாவட்டத்தில் உள்ள சித்லாகுச்சி என்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  இந்நிலையில் 5-ஆம் கட்டமாகத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசுகையில், “இன்று மத்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிர் போனதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். மத்திய படையினரின் செயல்களை நான் தொடர்ந்து கண்காணித்துகொண்டுதான் வருகிறேன். 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்போது தற்காப்புக்காக சுட்டோம் என்று மத்திய படைகள் கூறுகின்றன. இதுபோன்ற பொய்களைக் கூற தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும்.
மக்களின் ஆதரவு தங்களுக்கு இல்லை என்பதை பாஜக உணர்ந்துவிட்டதால்தான் மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் சதியின் ஒரு பகுதிதான். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். நான் எல்லோரிடமும் ஒன்றை கேட்கிறேன். எல்லோரும் அமைதியாக வாக்களியுங்கள். கொல்லப்பட்ட 4 பேருக்காகப் பழிவாங்குவது என்றால், அது தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மட்டுமே” என்று மம்தா பானர்ஜி பேசினார்.

click me!