புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

First Published Nov 6, 2017, 2:23 PM IST
Highlights
do not open new tasmac shops ordered chennai high court


உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3000 மதுக்கடைகள் மூடப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டுவந்து ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதே பாணியை தமிழக அரசும் மேற்கொள்ள முயற்சித்தது. உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 1700 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அவற்றில் 800 கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

ஆனால், மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டுவந்து மாவட்ட மற்றும் கிராமப்புற சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக வரும் 20-ம் தேதிக்குள் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர் விவகாரம், டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் என தமிழக அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
 

click me!