
தமிழக டிஜிபியை அவதூறாக விமர்சனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாரிதாஸ் கைது விவகாரத்தில் தமிழக பாஜக கொந்தளித்து வருகிறது. அவர் அடுத்தடுத்து இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதால், குண்டர் சட்டம் பாய்ச்சும் நிலை ஏற்படலாம் என்று பாஜகவினர் அஞ்சுகின்றனர். திமுக அரசுக்கு எதிராக போராட்டம், ஆளுநருடன் சந்திப்பு என தமிழக பாஜக இந்த விவகாரத்தில் முழு மூச்சாக இயங்கி வருகிறது. இந்த விவகாரத்தின் ஒரு பகுதியாக இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தபோது, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவையும் விமர்சனம் செய்திருந்தார்.
அதாவது, “தமிழகத்தில் காவல் துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக காவல் துறை டிஜிபி கையில் இருந்து நழுவி விட்டது. தமிழகத்தில் காவல் துறையை திமுக மாவட்டச் செயலாளர்கள்தான் நடத்தி வருகின்றனர். காவல் துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி உள்ளார்” என்று அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் டிஜிபியை விமர்சனம் செய்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் ஆணையயர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவர் சிவக்குமார், டிஜிபி குறுத்து அவதூறாக கருத்து தெரிவித்தது தொடர்பாக இந்தப் புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலாயத்தில் பேட்டி அளித்தார். அதில், டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை, சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி உள்ளார் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று புகாரில் கூறியுள்ளார்.