நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் நாடகம் முறியடிப்பு... மகிழ்ச்சியில் தமிழக பாஜக பொதுச்செயலாளர்..!

By Asianet TamilFirst Published Jul 13, 2021, 9:48 PM IST
Highlights

தமிழக அரசு அமைத்த குழுவால் நீட் தேர்வுக்கு பாதிப்பில்லை என உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
 

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழுவை எதிர்த்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கரு.நாகராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தருவோம் திமுக கூறியது. ஆனால், ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது.


இந்தக் குழுவானது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது. அதனால்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்தக் குழு நீட்டுக்கு எதிரான எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை, இந்தக் குழு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் கூறுவதைப்போல நீட் தேர்வால் தொற்று பரவாது. மால்கள், மார்க்கெட்கள் என அனைத்தும் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.  இந்த விஷயத்தில் மாணவர்கள் குழப்பம் அடையக் கூடாது என்பதே எங்களுடைய முழு நோக்கம். நீட் தேர்வு குறித்த இந்தக் குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம்தான். இந்தக் குழுவால் நீட் தேர்வுக்கு பாதிப்பில்லை என உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வாய்ப்பு இல்லை.” என்று கரு. நாகராஜன் தெரிவித்தார்.
 

click me!