கிங் மேக்கரா, கிங்கா..? பழைய முழக்கத்தை கையில் எடுக்கும் தேமுதிக..!

By Asianet TamilFirst Published Sep 15, 2020, 8:49 AM IST
Highlights

எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

தேமுதிக 16-ம் ஆண்டு விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஏற்றி வைத்தார். இதற்காக 6 மாதங்கள் கழித்து கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் வருகைப் புரிந்தார். இந்த விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன்  விஜய பிரபாகரனும் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கு எப்போதும் என்னுடைய அப்பாதான் கிங். எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து செயற்குழு, பொதுக்குழுவை கூட்டிதான் தேமுதிக முடிவு செய்யும். 
தேமுதிக மீது நம்பிக்கை வைத்து இளைஞர்கள் கட்சியில் சேருகிறார்கள். விஜயகாந்தின் மகனாக என்னை பார்க்காதீர்கள். உங்களுடைய நண்பனாக பாருங்கள். விஜயகாந்த் 40 ஆண்டுகளாக மக்களுக்கு உழைத்து வருகிறார். இந்தி மொழி எதிர்ப்பு எனப் பலர் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் வழியில் அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம். பல மொழிகளை நாம் கற்றால்தான் நம் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்” என விஜய பிரபாகரன் பேசினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ‘நாங்க கிங் மேக்கராக இருக்க மாட்டோம்; கிங்காகதான் இருப்போம்’ என்று கட்சியின் விஜயகாந்தும் பிரேமலதாவும் தெரிவித்தார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகியோர் மீண்டும் பழைய முழக்கத்தையே கையில் எடுத்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
 

click me!