திமுக இளைஞரணியின் வரம்பு மீறிய மாற்றம்... மொத்த உ.பி.க்களையும் காண்டாக்கிய 12 தீர்மானங்கள்...

By sathish kFirst Published Aug 25, 2019, 11:39 AM IST
Highlights

சென்னை திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, மண்டல மாநாடு நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் முக்கியமாக 30 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி, 35 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, மண்டல மாநாடு நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் முக்கியமாக 30 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி, 35 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம் பின்வருமாறு;

தீர்மானம் 1 : இரங்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக தலைமை நிலையச் செயலாளருமான ஆயிரம் விளக்கு எஸ்.ஏ.எம். உசேன் அவர்கள், புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்கள், விக்கரவாண்டி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. ராதாமணி அவர்கள், அரியலூர் மாவட்டக் கழக செயலாளரின் தந்தையும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கோவை மு.இராமநாதன் அவர்கள், கழக சொத்து பாதுகாப்புக் குழு துணை தலைவர் ஆர்.டி.சீதாபதி அவர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கா.ரா.சுப்பையன் அவர்கள், திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவர்கள், திமுக மக்களவை துணை தலைவரும், கழக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி அவர்களின் மாமியார் சுசிலா கோவிந்தசாமி ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

அதேபோல, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசனின் மனைவி செல்வி, திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மு.ஜெயக்குமாரின் தந்தை முத்துசாமி, திருநெல்வேலி மாநகர முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.வி.சுரேஷ் அவர்களின் தாயார் வி.ஆதிலட்சுமி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பழனியப்பன் அவர்களின் தந்தை தர்மன் ஆகியோரது மறைவுக்கும் இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றதால் தமிழக மாணவ - மாணவியர் பலர் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி அனுப்பப்பட்ட இரு மசோதாக்களையும், குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிய விவரங்களை சட்டமன்றம் - மக்கள் மன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்து தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கிய தமிழக அரசை இளைஞரணியின் நிர்வாகிகள் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உயிர் நீத்த மாணவ - மாணவியருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.

அதேபோல, தமிழகத்தில் நீலகிரி மற்றும் கேரளாவிலும் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உடமைகளையும் உயிரையும் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தும் - நன்றியும்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி, வேலூர் உட்பட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வரலாறு காணாத வகையில் வெற்றிபெற வைத்த நம் கழகத் தலைவர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அல்லும் பகலும் அயராது உழைத்த இளைஞரணித் தோழர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் ஆகியோருக்கு வாழ்த்துகளையும், வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது இக்கூட்டம்.

தீர்மானம் 3: மாநில மொழிகளுக்கான உரிய அந்தஸ்த்தை பெற்றுத்தந்த தலைவருக்கு நன்றி!

அஞ்சல் துறைத் தேர்வுகள் வழக்கத்துக்கு மாறாக, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரலெழுப்பி இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்தனர். இதனால் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் அந்தந்த மாநில மொழிகளிலேயே தேர்வு நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. விரைந்து செயல்பட்டு அந்தந்த மாநில மொழிகளுக்கான உரிய அந்தஸ்த்தை நிலைநிறுத்திய நம் தலைவருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் இந்தக் கூட்டம் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 4: தலைவர் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இருவரின் பிறந்தநாளினையொட்டி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நம் இளைஞர் அணி பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதேபோல, மார்ச் 1 - இளைஞர் எழுச்சி நாளான நம் தலைவரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக இளைஞர்களை ஊக்குவிக்க மாவட்ட - மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5: உறுப்பினர் சேர்க்கை இலக்கு - 30 லட்சம்!

வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள்ளான 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என நம் நிர்வாகிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது இந்தக் கூட்டம்.

தீர்மானம் 6: இளைஞர் அணி உறுப்பினர் வயது வரம்பு - 18 முதல் 35 வரை!

15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என்பதையும் இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 7: சுற்றுச்சூழலைக் காப்போம்!

தூர்வாரப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் நீர்நிலைகள், அதிக பிளாஸ்டிக் பயன்பாடுகள்... இப்படியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க நம் தி.மு.க இளைஞரணி இனி அதிக கவனம் செலுத்தும். இதை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம் 8: மாவட்டந்தோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள்!

நம் கழகத்தின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையிலும், நம் கழக அரசின் சாதனைகளை அவர்களுக்கு விளக்கும் வகையிலும், இயக்க முன்னோடிகளைக் கொண்டு மாவட்டந்தோறும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பதையும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9: இளைஞர் அணி மாநில மாநாடு!

நம் இளைஞரணி அமைப்பு மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு மிகாமல் ஒரு மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்பதையும் இக்கூட்டம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 10: அரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை!

லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையிலும், இன்னும் பல லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும்நிலையிலும், தமிழகத்திலுள்ள அஞ்சல், இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர்களுக்கு வாரி வழங்கும் துரோகத்தை மத்திய அரசு செய்துவருகிறது. இதற்கு அ.தி.மு.க அரசும் துணை போகிறது. இந்த துரோகச் செயல்களைச் செய்யும் மத்திய, மாநில அரசுகளை இளைஞர் அணியின் இந்த நிர்வாகிகள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பில் - தமிழருக்கு முன்னுரிமை வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: தேசியக் கல்விக்கொள்கை வரையரையை திரும்பப்பெறுக!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கனவு திட்டமாம் சமச்சீர் கல்வியை அழிக்கும் வகையிலும், கிராமப்புற பள்ளிகளை மூடி ஏழை - எளிய - நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வகையிலும், தயாரிக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கை வரையரையை கண்டிப்பதோடு, இந்த வரையரையை திரும்பப்பெருமாறும் மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12: தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தல்!

ஃபோர்டு, நிஸான், ஹூண்டாய்... போன்ற பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்ற நற்பெயரை பெற்றுத் தந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க ஆட்சி. இன்று ஆளும் அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் லாபகரமாக தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் வேலை இழக்கும் சூழலும் நிலவுகிறது. இந்நிலையை ஏற்படுத்திய மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

click me!