மூன்றரை மணி நேரம்..! காய்ச்சி எடுத்த ஸ்டாலின்..! சங்கடத்தில் நெளிந்த மாவட்டச் செயலாளர்கள்..!

By Selva KathirFirst Published Jan 22, 2020, 10:27 AM IST
Highlights

சொல்லி வைத்தது போல் மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது திமுக செயற்குழு. திமுக தலைவர் ஸ்டாலினும் சரியாக  10 மணிக்கு வந்துவிட்டார். அதற்கு முன்னதாகவே முன்னணி தலைவர்கள் அறிவாலயத்தில் ஆஜராகியிருந்தனர். செயற்குழு கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் நடைபெற்று முடிந்தது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தான் என்கிறார்கள். செயற்குழு உறுப்பினர்களோடு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

திமுக செயற்குழு கூட்டத்தோடு கூட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலாளர்களை ஒரு பிடி பிடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

சொல்லி வைத்தது போல் மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது திமுக செயற்குழு. திமுக தலைவர் ஸ்டாலினும் சரியாக  10 மணிக்கு வந்துவிட்டார். அதற்கு முன்னதாகவே முன்னணி தலைவர்கள் அறிவாலயத்தில் ஆஜராகியிருந்தனர். செயற்குழு கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் நடைபெற்று முடிந்தது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தான் என்கிறார்கள். செயற்குழு உறுப்பினர்களோடு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கூட்டத்திற்கு வரும்போதே மாவட்டச் செயலாளர்கள் பலரின் முகங்கள் வாடிப் போய் தான் இருந்தன. காரணம் கூட்டம் எதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. கூட்டம் தொடங்கியதுமே ஸ்டாலின் கைகளில் மைக் கொடுக்கப்பட்டது. தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை வாழ்த்தியதுடன், பாராட்டியும் பேசியுள்ளார் ஸ்டாலின். அந்த மாவட்டங்களில் எல்லாம் அதிமுக வாஷ் அவுட் செய்யப்பட்டிருந்தன.

இதனால் வெற்றி பெற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் பெயர்களை குறிப்பிட்டும் அந்த மாவட்டங்களில் திமுகவிற்கு கிடைத்த இடங்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார் ஸ்டாலின். பாராட்டு, வாழ்த்து படலங்கள் முடிந்த கையோடு படுதோல்வியை சந்தித்த மாவட்டங்களின் பெயர்களை வாசித்துள்ளார் ஸ்டாலின். முதலில் ஆரம்பித்தது சேலத்தில் இருந்து தான் என்று கூறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் ஒரே வருடத்திற்குள் அந்த மாவட்டத்தை அதிமுகவிடம் தாரை வார்க்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

யாருக்கும் பதில் அளிக்க எல்லாம் வாய்ப்பு வழங்கவில்லை. தோல்விக்கு காரணம் என்ன என எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு திமுகவிற்கு தோல்வி கிடைத்த மாவட்டங்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களை ஒரு பிடி பிடித்துள்ளார். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட விவகாரம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் அப்படியே நமக்கு எதிராக மாற காரணமே இந்த புதுக்கோட்டை மாவட்டம் தான் என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

அதிக இடங்களில் வென்றும் புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்தை அதிமுகவிடம் பறிகொடுத்ததை என்னால் ஏற்கவே முடியாது என்று ஸ்டாலின் கொந்தளித்ததாக சொல்கிறார்கள். இப்படியாக பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் கடைசி வரை, மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களை தேர்வு செய்தவர்களை பட்டியல் போட்டு கண்டித்துள்ளாராம் ஸ்டாலின். இதனால் கூட்டம் முடிந்து வெளியே வரும் போது எந்த நிர்வாகி முகத்திலும்  ஈ ஆடவில்லை. ஒரு சிலர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த போதே நெளிந்துள்ளனர்.

click me!