
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் காசை பார்க்காமல் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 53ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மலர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- ஆளுங்கட்சி முறைகேடு, அராஜகங்களில் ஈடுபடமால் நடுநிலையாக இருக்க வேண்டும். யார் நல்லது செய்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அமமுக நல்ல வேட்பாளர்களைத்தான் தேர்வு செய்துள்ளது அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது ஆரோக்கியமான விஷயம்தான். உள்ளாட்சியிலும் திமுக வெற்றிபெற்றால் அழிவு ஏற்படும் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பற்றி தாமதமாக பாஜக புரிந்துகொண்டுள்ளது. பாஜகவும், பாமகவும் இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி பற்றி புரிந்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான் கூட்டணி முறிவு.
முன்பே உணர்ந்திருந்தால் முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் காசை பார்க்காமல் நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். ராகுல் காந்தி தன்னை தமிழன் என்பது வரவேற்க தக்கதுதான். ஆனால், நீட் தேர்வுக்கு காரணமே திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.