மீண்டும் கெத்து காட்டும் திமுக… ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு ... எந்தெந்த கட்சிக்கு எத்தனை சதவீத வாக்கு கிடைக்கும் ?

By Selvanayagam PFirst Published Feb 4, 2019, 9:01 AM IST
Highlights

ஆங்கில செய்தி சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40  தொகுதிகளையும் திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் கைப்பற்றும்  என்று தெரியவந்துள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை  தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.

தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் வரும் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும் என்று தொலைக்காட்சிகளும், பலவேறு நிறுவனங்களும் கருத்துக் கணிப்புகள் நடத்தி வெளியிட்டு வருகின்றன.

ஏபிபி, இந்தியா டுடே மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மத்தியில் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று தெரியவந்ததுள்ளது.


இதனிடையே தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது குறித்து ஏபிபி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக -காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவித்தது.

இதே போல் இந்தியா டு டே நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 36 தொகுதிகளையும், அதிமுக 4 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பிலும் மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரியவந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 30 முதல் 31 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறும் என்றும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஒட்டு மொத்தமாக தோல்வி அடையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக  44 சதவீத வாக்குகளையும், அதிமுக 21.3 சதவீத வாக்குகளையும், பாஜக 6.7 சதவீத வாக்குகளையும், தேமுதிக, பாமக மற்றும் இதர கட்சிகள் 27.8 சாவீத வாக்குகளையும் பெறும் என்றும்  தெரியவந்துள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தாலும் அது வெற்றி பெற முடியாது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது

click me!